P.Susheela

Advertisement

முதல் பக்கம் » இசை அரசி பி.சுசீலா

இசை அரசி பி.சுசீலா

01 ஜன,1970 - 05:30 IST
எழுத்தின் அளவு:

வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர் போன்று தென்னிந்தியாவின் பாடும் வானம்பாடி பி.சுசீலா. 84 வயதான பி.சுசீலா, 65 ஆண்டுகளாக சினிமாவில் பாடி வருகிறார்.

இசை பயணம்
ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில், முகுந்தராவ் - சேஷாவதாரம் தம்பதிக்கு, 1935 நவ.,13ல் பிறந்தவர் பின்னணி பாடகி பி.சுசீலா. சிறு வயதிலேயே இவரிடம் இசை ஆர்வம் இருந்ததை கண்டு கொண்ட அவரது பெற்றோர், முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். பின்னர் விஜயநகரம் இசைக்கல்லூரியில் டிப்ளமோ படிப்பை படித்து அதில் முதல் வகுப்பில் தேறினார். இதற்கு முன்பே வானொலி நிகழ்ச்சிகளிலும் பாடல்கள் பாடிக் கொண்டிருந்த சுசீலாவிற்கு, அதே வானொலி நிலையத்தின் மூலம் சினிமாவில் பாடவும் வாய்ப்பு வந்தது எதிர்பாராத ஒன்று.

அந்நாளில் மிகப்பெரிய இசை அமைப்பாளரான பெண்டியாலா நாகேஸ்வரராவ், தான் இசை அமைக்கும் புதிய படத்திற்கு புதிய குரல்களை தேடிக்கொண்டிருந்தார். வானொலி நிலையத்தில் பாடிக் கொண்டிருப்பவர்களில் சிலரை அனுப்பி வைக்குமாறு நிலையத்தாரிடம் நாகேஸ்வரராவ் கூற அவர்கள் ஐந்து பேரை அனுப்பி வைக்க அதில் ஒருவர் தான் பி.சுசீலா.

1953-ஆம் ஆண்டு ஏ நாகேஸ்வரராவ், ஜி வரலஷ்மி நடிப்பில் பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையமைப்பில் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவான திரைப்படம் பெற்ற தாய். இத்திரைப்படம் தான் சுசீலாவின் திரை இசைப் பயணத்தின் ஆணிவேர். ஏதுக்கழைத் தாய் ஏதுக்கு என்ற பாடல் தான் இவரது முதல் திரைப்பட பாடலாகும். உடன் பாடியவர் ஏ.எம்.ராஜா. இதன் பின் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மாதச்சம்பளத்தில் பின்னணிப் பாடகியாக இருந்து வந்தார்.

திருப்பம் தந்த படம்
சுசீலாவின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை 1955-ஆம் ஆண்டு வெளிவந்த கணவனே கண்கண்ட தெய்வம் என்ற திரைப்படம் மாற்றியது என்றால் அது மிகையல்ல. காரணம் அத்திரைப்படத்தில் அவர் பாடிய அத்தனைப் பாடல்களும் தேனில் விழுந்த பலாவாக இனிமையாக இருந்தது. எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ, உன்னைக் கண் தேடுதே உன் எழில் காணவே உள்ளம் நாடுதே, அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண்வளராய் என் ராஜா போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.

முத்திரை பதித்த உத்தம புத்திரன்
சுசீலாவின் திரை இசை மகுடத்தில் மீண்டும் ஒரு வைரக்கல் பதித்த திரைப்படம் உத்தம புத்திரன். 1957 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்திற்கு இசைப் கோர்ப்பு ஜி ராமனாதன். பி லீலா ஜிக்கி, ஏ.பி.கோமளா, ஜமுனா ராணி என்று பலர் இப்படத்தில் பாடியிருந்தாலும், சுசீலாவிற்கு கிடைத்த பாடல்கள் தனி முத்திரை பதித்தன என்றே சொல்ல வேண்டும். முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே, அன்பே அமுதே அருங்கனியே, உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே போன்ற பாடல்களினால் அவர் நிலை உயரப் பெற்றார் என்றே சொல்ல வேண்டும்.

இதனைத் தொடர்ந்து 1959 ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜாவின் இசையில் வந்து மிகப் பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் கல்யாணப் பரிசு. இதில் மொத்தம் 8 பாடல்கள் அதில் 5 பாடல்கள் சுசீலா பாடியவை, அத்தனையும் முத்தானவை.

எம்.எஸ்.வி., சுசீலா ராஜ்ஜியம்
1960களின் ஆரம்பம் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இரட்டையர்களின் இசை, விஸ்வரூப ஆரம்பம் என்றே சொல்ல வேண்டும். இவர்களது இசையில் இயக்குநர் பீம்சிங்கின் இயக்கத்தில் வந்த ப வரிசைப் படங்கள் திரையிசையில் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகை அல்ல. பாவ மன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார் என்று ப வரிசைப் படங்களில் சுசீலாவின் குரலில் வந்த அத்தனைப் பாடல்களும் சாகாவரம் பெற்றவை.

மலர்ந்தும் மலராத பாதி மலர், யார் யார் யார் அவள் யாரோ, மயங்குகிறாள் ஒரு மாது, அத்தான் என்னத்தான, பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது, ஆலய மணியின் ஓசையை, காதல் சிறகை காற்றினில் விரித்து, பார்த்தால் பசி தீரும், யாருக்கு மாப்பிள்ளை யாரோ, கொடி அசைந்ததும் காற்று வந்ததா என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

தேசிய விருது
1968 ஆம் ஆண்டு ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் சுசீலா பாடிய நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா என்ற பாடலுக்காக அந்த ஆண்டு சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றார். 1970களின் பிற்பகுதியில் குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவின் வருகைக்குப்பின் அடுத்த தலைமுறை கலைஞர்கள் திரைத்துறையில் கால்பதித்த காலம் இந்த காலகட்டங்களில் சுசீலாவின் பாடல்களின் எண்ணிக்கை முன்பிருந்த அளவு இல்லை என்றாலும் இளையராஜாவின இசையிலும் ஏராளமான வெற்றிப் பாடல்களை பாடியிருக்கின்றார்.

இளையராஜா டூ ரஹ்மான்
இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில், சொந்தமில்லை பந்தமில்லை பாடுது ஒரு பறவை என்ற பாடலை பாட ஆரம்பித்தவர் அவரது இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியிருக்கிறார். கண்ணன் ஒரு கைக்குழந்தை, டார்லிங் டார்லிங் டார்லிங், சுகமோ ஆயிரம், ராசாவே உன்ன காணாத நெஞ்சு, காலைத் தென்றல் பாடி வரும், நிலவு நேரம் இரவு காயும், கற்பூர பொம்மை ஒன்று, ராசாத்தி மனசில, முத்துமணி மாலை உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட என்று இவர் இளையராஜாவின் இசையில் பாடிய பாடல்கள் அனைத்தும் இன்றும் ரசிக நெஞ்சங்களில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு, கப்பலேறிப் போயாச்சு என்று ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும் பாடி தன் குரலுக்கு என்றுமே வயதில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.

« தினமலர் முதல் பக்கம் சினிமா முதல் பக்கம் »
Advertisement


Advertisement
Advertisement

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement