
2021 - தமிழ் சினிமா ரீவைன்ட்…
* 2021ம் ஆண்டின் முதல் நாளிலேயே இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன
* புத்தாண்டின் ஆரம்பமும் தியேட்டர்களைப் பொறுத்தவரையில் 50 சதவீத இருக்கைகளில் தான் தொடர்ந்தது.
* பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "மாஸ்டர்" திரைப்படம் 50 சதவீத இருக்கைகளுடன் ஜனவரி 13ம் தேதி வெளியானது.
* "மாஸ்டர்" படத்தில் முதல் முறையாக நேரடி வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி.
|
* சிலம்பரசன் நடித்த "ஈஸ்வரன்" படமும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வெளியானது.
* ஜனவரி மாதத்தில் ஓடிடி தளங்களில் வெளியான மாதவன் நடித்த "மாறா", ஜெயம் ரவி நடித்த "பூமி" ஆகிய படங்கள் கடும் விமர்சனத்துக்கு ஆளாகின.
* கொரோனா முதல் அலை தாக்கத்திற்குப் பிறகு தியேட்டர்கள் 100 சதவீத அனுமதியுடன் பிப்ரவரி 1ம் தேதி முதல் செயல்பட ஆரம்பித்தன.
* விஜய் சேதுபதி, கவுதம் மேனன், அமலா பால் மற்றும் பலர் நடிக்க கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இயக்கிய ஆந்தாலஜி படமான "குட்டி ஸ்டோரி" படம் பிப்ரவரி 12 தியேட்டர்களில் வெளியானது.
* சந்தானம் நாயகனாக நடித்த "பாரிஸ் ஜெயராஜ்" பிப்ரவரி 12ல் வெளியானது. படம் நகைச்சுவையாக இருந்தும் ரசிகர்களிடம் சென்று சேரவில்லை.
* விஷால் நாயகனாக நடித்த "சக்ரா" படம் பிப்ரவரி 19ம் தேதி வெளியாகி, தோல்விப் படமாக அமைந்தது.
* ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்த "ஏலே" படம் நேரடியாக டிவியில் பிப்ரவரி 28ம் தேதி ஒளிபரப்பானது.
* செல்வராகவன் இயக்கத்தில், எஸ்ஜே சூர்யா நாயகனாக நடித்த "நெஞ்சம் மறப்பதில்லை" படம் சில வருட தாமதத்திற்குப் பின் மார்ச் 5ம் தேதி தியேட்டர்களில் வெளியானது.
|
* மார்ச் 12ம் தேதி ஆர்யா நடித்த "டெடி" படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
* பிரபு சாலமன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் வெளிவந்த "காடன்" படம் மார்ச் 26ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி ஏமாற்றத்தைத் தந்தது.
* ஏப்ரல் 2ம் தேதி தியேட்டர்களில் வெளியான கார்த்தி நடித்த "சுல்தான்" படம் வெற்றிப் படமாக அமைந்தது.
* யோகிபாபு கதாநாயகனாக நடித்த "மண்டேலா" படம் பிப்ரவரி 4ம் தேதி, நேரடியாக டிவியிலும் பின்பு அன்று இரவே ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது.
* ஏப்ரல் 9ம் தேதி தனுஷ் நடித்து தியேட்டர்களில் வெளியான "கர்ணன்" படத்தில் வருடம் பற்றிய தகவல் ஒன்றை தவறாகச் சொன்னதால் சர்ச்சை எழுந்து, பின்னர் அது மாற்றப்பட்டது.
* கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தியேட்டர்களில் இருக்கைகளுக்கான அனுமதி ஏப்ரல் 10ம் தேதி முதல் 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
* த்ரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த "பரமபத விளையாட்டு" படம் ஏப்ரல் 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.
|
* ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் நாயகனாக நடித்த "வணக்கம்டா மாப்ளே" படம் ஏப்ரல் 16ம் தேதி நேரடியாக டிவியில் வெளியிடப்பட்டது.
* கொரோனா இரண்டாவது அலை தாக்கம் அதிகமானதன் காரணமாக ஏப்ரல் 26ம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன.
* 2021ம் ஆண்டின் ஆரம்பம் 50 சதவீத இருக்கையுடன் ஆரம்பித்து, பிப்ரவரி 1ல் 100 சதவீத இருக்கை அனுமதியாக மாறி, பின் ஏப்ரல் 26ம் தேதி முழுவதுமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.
* தியேட்டர்கள் முழுவதுமாக மூடப்பட்டதால், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த "ஜகமே தந்திரம்" படம் எதிர்பாராத விதத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் மிகவும் மோசமான வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது.
* ஜுலை மாதம் 22ம் தேதி பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த "சார்பட்டா பரம்பரை" படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம் பெற்ற காட்சிகள் அதிகமான மீம்ஸ்கள் வரும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
* மணிரத்னம் தயாரிப்பில், 9 இயக்குனர்கள் இயக்கத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சித்தார்த், அதர்வா, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்த "நவரசா" படம் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6ம் தேதி வெளியானது.
* ஆகஸ்ட் 13ம் தேதி நயன்தாரா நடித்த "நெற்றிக்கண்" படம் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்களை ஏமாற்றியது.
|
* ஏப்ரல் 26ம் தேதி முழுவதுமாக மூடப்பட்ட தியேட்டர்கள் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் குறைந்த காரணத்தால் மீண்டும் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அரசு அனுமதி அளித்தது.
* ஆகஸ்ட் 23ல் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் செப்டம்பர் 3ம் தேதி முதல் தான் புதிய படங்கள் வெளிவர ஆரம்பித்தன.
* ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தலா 6 படங்களும், அக்டோபர் மாதத்தில் 7 படங்களும், பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகின.
* செப்டம்பர் 9ம் தேதி விஜய் சேதுபதி நடித்த "லாபம்" படம் வெளிவந்து ஏமாற்றத்தைத் தந்தது.
* செப்டம்பர் 10ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படமான "தலைவி" வெளிவந்தது. இந்தப் படம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போனது திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
* செப்டம்பர் 10ல் சந்தானம் நடித்த "டிக்கிலோனா" படம் ஓடிடியில் வெளிவந்து சுமாரான வரவேற்பைப் பெற்றது. அப்படத்தில் இடம் பெற்ற ரீமிக்ஸ் பாடலான "பேரு வச்சாலும்…" பாடல் ரசிகர்களைக் கவர்ந்தது.
* விஜய்சேதுபதி நடித்த "துக்ளக் தர்பார்" படம் செப்டம்பர் 10ம் தேதி டிவியில் நேரடியாக வெளியானது.
* செப்டம்பர் 17ம் தேதி ஓடிடி தளத்தில் வெளிவந்த விஜய் சேதுபதி நடித்த "அனபெல் சேதுபதி" படம் கடும் விமர்சனங்களை சந்தித்து வரவேற்பைப் பெறத் தவறியது.
* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கதாநாயகனாக அறிமுகமான "ப்ரண்ட்ஷிப்" படம் செப்டம்பர் 17ம் தேதி வெளியானது. ஆனால், படம் வெற்றி பெறவில்லை.
* கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் வெளிவந்த படங்களில் விஜய் ஆண்டனி நடித்து செப்டம்பர் 17ல் வந்த "கோடியில் ஒருவன்" படம்தான் முதல் வெற்றிப் படம் என அப்படக்குழுவினர் அறிவித்தனர்.
* மோகன்ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் நடித்து அக்டோபர் 1ல் வெளிவந்த "ருத்ர தாண்டவம்" படம் சர்ச்சைக்குரிய கதையுடன் வந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது.
* சிவகார்த்திகேயன் நடித்து அக்டோபர் 9ல் வெளிவந்த "டாக்டர்" படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
* சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்து செப்டம்பர் 14ல் வெளிவந்த "அரண்மனை 3" படமும் வியாபார ரீதியாக வெற்றி பெற்றது.
* சமுத்திரக்கனி இயக்கி, நாயகனாக நடித்த "விநோதய சித்தம்" படம் அக்டோபர் 13ல் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
* அக்டோபர் 14ல் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி நடித்த "உடன்பிறப்பே" ஓடிடி தளத்தில் வெளியாகி, மிகச் சுமாரான வரவேற்பையே பெற முடிந்தது.
* அக்டோபர் 22ல் ஓடிடி தளத்தில் வெளியான, ஹரிஷ்கல்யாண், பிரியா பவானிசங்கர் நடித்த "ஓ மணப்பெண்ணே" இளைஞர்களைக் கவர்ந்தது.
|
* நவம்பர் 1 முதல் சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
* சூர்யா நடித்து நவம்பர் 2ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான "ஜெய் பீம்" படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கூடவே, வன்னியர்களை தரக்குறைவாக சித்தரித்ததாக கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
* தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி ரஜினிகாந்த் நடித்த "அண்ணாத்த", விஷால் நடித்த "எனிமி" ஆகிய படங்கள் வெளிவந்தன.
* சந்தானம் நாயகனாக நடித்த "சபாபதி" படம் நவம்பர் 19ம் தேதி வெளியாகி வெற்றி பெறாமல் போனது.
* சில பல போராட்டங்களுக்குப் பின் சிம்பு நாயகனாக நடித்த "மாநாடு" படம் நவம்பர் 25ம் தேதி வெளியாகி வெற்றியும், வரவேற்பையும் பெற்றது.
* ஜிபி பிரகாஷ்குமார் நடித்த "பேச்சுலர், ஜெயில்" அடுத்தடுத்த வாரங்களில் டிசம்பர் 3, டிசம்பர் 9 ஆகிய தேதிகளில் வெளியானது. "பேச்சுலர்" படம் வெற்றிப்படம் என படக்குழு அறிவித்தது.
|
* வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான டிசம்பர் 31ம் தேதி 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தன. வருடத்தின் முதல் நாளான ஜனவரி 1லும் படங்கள் வெளிவந்தன, கடைசி நாளான டிசம்பர் 31லும் படங்கள் வெளிவந்தன.
* நடிகர் ரஜினிகாந்திற்கு திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
* நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.
* தன்னை "தல" என்று அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார் நடிகர் அஜித்.
|
* நகைச்சுவை நடிகர் விவேக்கின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
* இயக்குனர்கள் ஜிஎன் ரங்கராஜன், எஸ்பி ஜனநாதன், கே.சொர்ணம், சி.வி.சசிகுமார், கோவி.மணிசேகரன், ஆச்சார்யா ரவி, பாடலாசிரியர்கள் புலமைப்பித்தன், பிறைசூடன், நடிகை சித்ரா ஆகியோர் மரணம்.
* கொரோனா காரணமாக இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, எஸ்.தயாளன், தயாரிப்பாளர்கள் கே.வி.பாலு, சேலம் சந்திரசேகர், பாபுராஜா, நடிகர்கள் நிதிஷ் வீரா, கில்லி மாறன், வெங்கட் ஆகியோர் மரணம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!