
நம்ம ஊரு பாட்டுக்காரன்… நடிகர் ராமராஜனின் 40 ஆண்டுகள்!
ஒரு கதாநாயகனுக்குத் தேவையான அம்சங்கள் என்று சினிமா தன்வசம் வைத்திருந்த அத்தனை கோட்பாடுகளையும் உடைத்தவர். ரஜினியைப் போல் ஸ்டைல் பண்ணத் தெரியாது. கமல் போல் நடிக்கத் தெரியாது. விஜயகாந்த் போல் சண்டை செய்யத் தெரியாது. ஆனால் ஒரு காலகட்டத்தில் அந்த மூவருக்கும் இணையாக தமிழ் சினிமாவில் கோலோச்சியவர். இன்னும் சொல்லப்போனால் 485 நாட்கள் ஓடி சாதனை செய்த கரகாட்டக்காரன் போன்ற படத்தைக் கொடுத்த ஒரே நடிகர் இந்த ராமராஜன் தான்.
கையில் அரிவாள் இல்லாமல், பஞ்ச் வசனங்கள் பேசாமல், கிராமத்து மனிதர்களின் மொழியில் பேசி, அவர்களின் வாழ்க்கையைத் திரையில் பிரதிபலித்து வெற்றிக்கொடி நாட்டியவர். இன்று வில்லன் கேரக்டர்களையே மிஞ்சும் அளவுக்கு கதாநாயகர்கள் சிகரட் புகைப்பது, மது அருந்துவது, இன்னும் சில தகாத செயல்களில் ஈடுபடும் நிலையில் தன் அத்தனை படங்களும் தர்மம் காக்கும் பாத்திரங்களில் மட்டுமே நடித்தவர் என்பது ராமராஜனின் தனித்தன்மை.
இந்த சந்தர்ப்பத்தில் அவரது முன்கதைச் சுருக்கம் கொஞ்சமும் தெரிந்துகொள்ளலாம் அல்லவா?
சிவகங்கை மாவட்டம் ஒக்கூரைச் சேர்ந்த ராமராஜனுக்கு சிறுவயது முதலே சினிமா மீது தீராத காதல். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னைக்கு வந்தவர், ஆரம்பத்தில் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்தார். சினிமாத் துறையின் பல்வேறு வேலைகளையும் அறிந்து கொண்டார்.
ஒரு கட்டத்தில் மதுரையில் திரையரங்கிலும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருந்திருக்கிறது. திரையரங்கில் திரைப்படங்களைப் பார்த்துப் பார்த்தே சினிமாவின் வெற்றி ரகசியங்களைப் புரிந்துகொண்டவர். 1985-ல் "மண்ணுக்கேத்த பொண்ணு" திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களை இயக்கிய அவர், 1986-ல் வெளியான "நம்ம ஊரு நல்ல ஊரு" படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். இந்த "86 தான் அவரது கதாநாயகப் பயணத்தின் தொடக்கம்.
1987-ல் வெளியான "எங்க ஊரு பாட்டுக்காரன்" ராமராஜனுக்கு மிகப்பெரிய அடையாளத்தைத் தேடித்தந்தது. கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. "செண்பகமே செண்பகமே" பாடல் ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானதல்ல. அதைத் தொடர்ந்து "கிராமத்து மின்னல்", "எங்க ஊரு காவல்காரன்", "நம்ம ஊரு நாயகன்", "ராசாவே உன்னை நம்பி" என கிராமத்து பின்னணியில் அமைந்த படங்களில் ராமராஜன் தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.
அவரது படங்களின் கதாநாயகன் ஒரு பெரிய அந்தஸ்து மிக்கவனாக இருக்கவில்லை. விவசாயியாக, மாடு மேய்ப்பவனாக என்று தமிழ் சினிமாவில் வேறெந்த கதாநாயகனும் ஏற்காத மிக எளிய மனிதராக வந்து ஆச்சரியப்படுத்தினார். வில்லன் பாத்திரங்களுக்கு அதிக இடம் தராமல் உறவுகளையும் ஊர் மக்களையும் கொண்டாடினார். குறிப்பாக இவர் படங்களில் தாய்ப்பாசம் பார்ப்பவர் கண்களைக் குளமாக்கும்.
1989 ஜூன் 16. ராமராஜின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ் சினிமா வரலாற்றிலும் மறக்க முடியாத ஒரு நாள். அன்றைய தேதியில், கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான "கரகாட்டக்காரன்" ராமராஜனின் புகழை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. சினிமா டிக்கெட்டின் பின்பக்கத்தில் எழுதினாலும் இன்னும் கொஞ்சம் இடம் மிச்சமிருக்கும் என்கிற அளவுக்கு இத்துணுண்டு கதை.
அதில் ராமராஜன் - கனகா ஜோடி, கவுண்டமணி - செந்தில் நகைச்சுவை, இளையராஜாவின் இசை, கிராமத்து வாழ்வியல் என எல்லாமே அம்சமாய்ப் பொருந்தி நிற்க ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் இப்படத்தை தலைமேல் கரகம் ஏற்றி வைத்த மனநிலையில் தலைமேல் துக்கிவைத்துக் கொண்டாடினார்கள்.
"பாட்டாலே புத்தி சொன்னார்", "மாங்குயிலே பூங்குயிலே", "இந்த மான்", "ஊரு விட்டு ஊரு வந்து" போன்ற பாடல்கள் இன்றைக்கும் ரசிகர்களின் நெஞ்சில் பச்சை குத்திக்கொண்டவை. தமிழ் சினிமா வரலாற்றில் விநியோகஸ்தர்கள் "நாங்கள் வாங்கியது படம் அல்ல. அது லாட்டரி சீட்டு" என்று ஒருமனதாக புகழ்ந்த படம் என்றால் அது கரகாட்டக்காரன் மட்டுமே.
அச்சமயம் ரஜினி, கமலுக்கு இணையான மார்க்கெட் ராமராஜனுக்கும் உருவாகியிருந்ததால் 1989 தீபாவளிக்கு ரஜினிகாந்தின் "மாப்பிள்ளை", கமல்ஹாசனின் "வெற்றி விழா" ஆகிய படங்களுடன் ராமராஜனின் "அன்புக்கட்டளை", "தங்கமான ராசா" படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்த ராமராஜனுக்கு 1990-களின் மத்தியிலிருந்து சினிமா மார்க்கெட்டில் பின்னடைவு ஏற்படத் தொடங்கியது.
தமிழ் சினிமாவின் ரசனை மாறிக்கொண்டிருந்தது. புதிய இயக்குநர்கள், புதிய கதைகள், புதிய கதாநாயகர்கள் எனத் திரையுலகம் வேகமாக மாறியது.
1990-களின் இறுதியில் சினிமாவைக் காட்டிலும் அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
1998-ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒரு காலத்தில் திரையரங்குகளில் ரசிகர்களைக் குவித்த கதாநாயகன், நாடாளுமன்ற உறுப்பினராக டில்லிக்குச் சென்றார். பின்னர் அரசியலிலும் கொஞ்சம் தொய்வு ஏற்படவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2012-ல் "மேதை" படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு 2024-ல் "சாமானியன்" படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகத் திரைக்கு வந்தார்.
ஒரு காலத்தில் திரையரங்குகளைத் தனது படங்களால் நிரப்பியவர், மீண்டும் ரசிகர்களைச் சந்திக்க வந்தது அவரது பழைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாக இருந்தது. ஆனால் காலம் மாறிவிட்டது. ரசிகர்களின் ரசனையும் மாறிவிட்டது. "சாமானியன்" எதிர்பார்த்த வணிக வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் ராமராஜனின் சினிமா மீதான ஆர்வம் குறையவில்லை. எத்தனை தோல்விகள் வந்தாலும் " என்னை விட்டுப் போகாதே" என்று சினிமா ராமராஜனிடம் வேண்டிக் கொண்டிருக்கும் போல தற்போது மீண்டும் இளையராஜா இசையில் "கடவுள் தந்த பரிசு" படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே கடவுள் தந்த பரிசான 40 ஆண்டுகாலப் பயணம் இனியும் இனிதே தொடரட்டும்.




















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…