
பழைய அசோகனும் புதிய உன்னிக்குட்டனும் : மோகன்லாலின் சந்தோஷ பதிவு
தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு இளம் புத்த துறவியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “பழைய அசோகேட்டனும் புதிய உன்னிக்குட்டனும்” என்று பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் மோகன்லால். இந்த பதிவுக்கு காரணம் தெரியாத பலருக்கும் இதன் பின்னணியில் உள்ள தகவலை சொல்லிவிடலாம்.
1992ல் மலையாளத்தில் சங்கீத் சிவன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம் "யோதா". ஒரு இளம் புத்த துறவியை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி அவரை நேபாளத்தில் உள்ள புத்த மடாலயத்தில் சேர்க்கும் பொறுப்பை மோகன்லால் ஏற்றுக் கொண்டிருப்பார். இதற்கான பயணத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் பாசப்பிணைப்பு அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்த படத்தில் மோகன்லால் அசோகன் என்கிற கதாபாத்திரத்திலும் இளம் புத்த துறவி உன்னிக்குட்டன் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.
தற்போது லடாக்கில் லே பகுதியில் தனது படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அதேபோன்று ஒரு இளம் துறவியை மோகன்லால் சந்தித்தபோது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை யோதா படத்துடன் ஒப்பிட்டு இப்படி ஒரு பதிவிட்டுள்ளார் மோகன்லால். ஏ.ஆர் ரஹ்மான் முதன்முதலாக மலையாளத்தில் இசையமைத்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!