
வசூலில் 100 கோடியை தாண்டிய 2018: மற்ற மொழிகளில் வெளியாகுமா?
இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால் படம் கேரளாவில் நடந்த இயற்கை பேரழிவு சம்பந்தப்பட்டது. இது மற்ற மொழிகளுக்கு கனெக்ட் ஆகுமா என்ற சந்தேகத்தில் மலையாளத்தில் மட்டுமே வெளியானது. ஆனால் மழைவெள்ள பாதிப்பு என்பது வெவ்வேறு கால கட்டங்களில் எல்லா மொழி மக்களும் அனுபவித்தவைதான் என்பதாலும் படத்தின் வெற்றியாலும் படத்தை பிற மொழிகளிலும் வெளியிட முயற்சித்து வருகிறார்கள்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஜூட் ஆன்டனி ஜோசப் கூறியதாவது: இந்தப் படத்தை இயக்குவது மிகவும் கடிமான இருந்தது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் எனது முழு நேரமும் சக்தியும் இந்தப் படத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. நான் ஒன்றும் சிறப்பான இயக்குநர் கிடையாது. அதே சமயம் இதற்கு முன்னால் பெரிய படங்களை இயக்கியது இல்லை. ஆனால், கடுமையான உழைப்பின் மூலம் எல்லோராலும் எதையும் சாதிக்க முடியும் என்பதை இப்படத்திலிருந்து நான் கற்றுக்கொண்டேன்.
தயாரிப்பாளரிடம் இந்தப் படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியிட கோரினேன். இந்தப் படம் அந்த மக்களை எல்லாம் கனெக்ட் ஆகுமா, ஏனென்றால் மற்ற மொழிகளில் வெளியிட அதிக செலவாகும் என்றார். இது ஒரு இயற்கை பேரிடர் நிகழ்வு. அதனால் உலகிலுள்ள அனைவருக்கும் இப்படம் கனெக்ட் ஆகும் என்றேன்.
மும்பையில் படத்தை பார்த்தபோது உணர்ச்சிபொங்க அந்த பார்வையாளர்கள் கைதட்டிப் பார்த்தனர். மனித உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை, மொழி வேறுபாடின்றி அவை எல்லோரையும் இணைக்க கூடியவை. கேரள வெள்ளத்தின்போது எனது வீடு முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்தேன். கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். அந்தச் சம்பவம்தான் படமெடுக்க தூண்டியது. படம் மற்ற மொழிகளிலும் வெளியானால் மகிழ்ச்சி அடைவேன். என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!