
பறக்கும் பப்பன் படத்தை தூசு தட்டும் திலீப்
இதைத்தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பதை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு ஏற்கனவே 2018ல் தான் அறிவித்து, சில நாட்கள் படப்பிடிப்பும் நடத்தப்பட்ட பறக்கும் பப்பன் என்கிற படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு நடிகர் திலீப் திட்டமிட்டுள்ளாராம். அறிமுக இயக்குனர் வியன் விஷ்ணு என்பவர்தான் இந்த படத்தை இயக்குகிறார். ஒரு சாதாரண கிராமத்து மனிதனுக்கு பறக்கும் சக்தி கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதை மையப்படுத்தி பேன்டஸி படமாக இந்த படத்தின் கதை உருவாகியுள்ளது. இந்த படம் உருவாகி வந்த சமயத்தில் தான் திலீப் சிறைக்கு செல்ல நேர்ந்தது. அதனால் இந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஆனாலும் இந்த படம் நிச்சயம் உருவாகும் என திலீப் அவ்வப்போது கூறி வந்தார்.
இந்த நிலையில் கடந்த வருடம் இதே சூப்பர்மேன் கதையம்சத்துடன் மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அதற்கு முன்னதாகவே அதுபோன்ற அம்சத்துடன் அறிவிக்கப்பட்ட தனது பறக்கும் பப்பன் படத்தை நிச்சயம் திரைக்கு கொண்டுவந்து தீருவது என முடிவு செய்துள்ளாராம் திலீப். தற்போது நடித்து வரும் பாந்த்ரா படத்தை முடித்துவிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!