
சிரஞ்சீவியின் காட் பாதர்: நல்ல விமர்சனம் வந்தும் வசூல் குறைவு
உலக அளவில் 38 கோடியும், தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில் 20 கோடியும் மட்டுமே இந்தப் படம் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கான உலக அளவிலான தியேட்டர் வியாபாரம் சுமார் 90 கோடி வரை நடந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். சுமார் 120 கோடி வரை வசூலித்தால் மட்டுமே இந்தப் படம் வெற்றிப் படமாக அமையுமாம்.
அரசியலில் ஈடுபட்டதால் சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார் சிரஞ்சீவி. அதற்குப் பிறகு அவர் விஜய் நடித்து தமிழில் வெளிவந்த "கத்தி" படத்தின் தெலுங்கு ரீமேக்கான "கைதி நம்பர் 1" மூலம் மீண்டும் வெற்றிகரமாக ரீ என்ட்ரி ஆனார். ஆனாலும், அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த படங்கள் பிரம்மாண்டமாகத் தயாரானாலும் வெற்றிப் படங்களாக அமையவில்லை. "சைரா நரசிம்ம ரெட்டி, ஆச்சார்யா" ஆகிய இரண்டு படங்களும் தோல்வியைத் தான் தழுவியது.
"காட் பாதர்" படத்திற்கு பாசிட்டிவ்வாக விமர்சனங்கள் வந்ததால் வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் நாள் வசூல் குறைவாக இருப்பது கவலையை அளித்துள்ளதாம். ரீ என்ட்ரிக்குப் பிறகு வெளிவந்த சிரஞ்சீவி படங்களில் இந்தப் படம்தான் தெலுங்கு மாநிலங்களில் குறைவான வசூலைக் கொடுத்துள்ளதாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!