
2022ம் ஆண்டிலாவது இந்தியன் 2 வெளிவருமா ?
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது கிரேன் விபத்து ஏற்பட்டு படக்குழுவைச் சேர்ந்த மூவர் அகால மரணமடைந்தனர். அதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதற்கடுத்து மார்ச் மாதம் முதல் கொரானோ பரவல் ஆரம்பித்தால் படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்கவேயில்லை.
இந்த வருடம் ஜனவரி மாதத்தில்தான் படத் தயாரிப்பு நிறுவனமான லைக்காவிற்கும், ஷங்கருக்கும் இடையே எழுந்த பிரச்சினை வெளியில் வந்தது. நீதிமன்றத்தில் வேறு படங்களை இயக்கக் கூடாது என ஷங்கர் மீது படக்குழுவினர் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் தடை எதுவும் விதிக்காத காரணத்தால் தெலுங்குப் படம் பக்கம் சென்றார் ஷங்கர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் "இந்தியன் 2" பற்றிய அப்டேட் ஒன்றைக் கொடுத்தார். 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும், பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இருந்தாலும் ராம் சரணை வைத்து இயக்க உள்ள தெலுங்குப் படத்தை முடிக்காமல் ஷங்கர் "இந்தியன் 2" படம் பக்கம் மீண்டும் வர மாட்டார் எனத் தெரிகிறது. அப்படத்தை அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
அதற்குப் பிறகு அவர் "இந்தியன் 2" படப்பிடிப்பிற்குத் திரும்பினாலும் இன்னும் படமாக்க வேண்டிய 40 சதவீத காட்சிகளை முடித்து, இறுதிக்கட்டப் பணிகளை முடிக்க மேலும் காலதாமதமாகும். எனவே, 2022ம் ஆண்டிலும் "இந்தியன் 2" படம் வெளிவர வாய்ப்பில்லை. 2023ம் ஆண்டில்தான் வெளிவர வாய்ப்புகள் அதிகம்.
2019ல் ஆரம்பமான படம் 2023ல் திரைக்கு வந்தால் ஏற்கெனவே 200 கோடி ரூபாய் முதலீடு செய்த தயாரிப்பாளருக்கு கூடுதலான செலவு, வட்டி என படத்தின் பட்ஜெட் எங்கோ போய்விடும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!