
டிவியில் நேரடியாக வெளியாகும் 8வது படம் வெள்ளை யானை
கடந்த வருடம் கொரோனா முதல் அலை காரணமாக ஓடிடி தளங்களில் படங்கள் நேரடியாக வெளியானது. அதற்கு ஒரு படி மேலே, புதிய படங்களை நேரடியாக டிவிக்களில் வெளியிட ஆரம்பித்தார்கள். அந்த விதத்தில் கடந்த வருட தீபாவளிக்கு பிரசன்னா, ஷாம், யோகி பாபு நடித்த "நாங்க ரொம்ப பிஸி" படத்தை டிவியில் நேரடியாக வெளியிட்டார்கள்.
அதற்குப் பிறகு இந்த வருடத்தில், “புலிக்குத்தி பாண்டி, ஏலே, மண்டேலா, சர்பத், வணக்கம்டா மாப்ளே” ஆகிய படங்களை தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே டிவிக்களில் வெளியிட்டார்கள். அந்த வரிசையில் அடுத்ததாக "வெள்ளை யானை" படம் வரும் ஜுலை 11ம் தேதி மதியம் 3 மணிக்கு ஒரு முன்னணி டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
சுப்பிரமணிய சிவா இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஆத்மிகா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். டிவியில் நேரடியாக வெளியாகும் 8வது படம் இது.
கொரோனா அலை காரணமாகத்தான் கடந்த வருடம் முதல் டிவியில் படங்களை நேரடியாக வெளியிட ஆரம்பித்தார்கள். ஆனால், முதன் முதலாக 2008ம் ஆண்டு சேரன், நவ்யா நாயர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து தேசிய விருது பெற்ற "ஆடும் கூத்து" படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பானது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!