
ஹீரோ மெட்டீரியல் இல்லை என்ற கேள்வி... : அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன்
இப்படி ஒரு சம்பவம் ஐதராபாத்தில் நடந்த "டியூட்" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்திருக்கிறது. ஒரு பெண் பத்திரிகையாளர் (?), படத்தின் ஹீரோ பிரதீப் ரங்கநாதனைப் பார்த்து, “நீங்கள் ஹீரோ மெட்டீரியலே கிடையாது, உங்களுக்கு அந்த தோற்றமே இல்லை,” என விமர்சித்திருக்கிறார்.
அதைக் கேட்டுக் கோபப்படாத பிரதீப், “படம் பார்க்கும் ரசிகர்கள் என்னுடன் "கனெக்ட்" செய்து கொள்கிறார்கள். நான் சாதாரண மனிதனைப் போல என் படத்தில் இருப்பதுதான் அதற்குக் காரணம்,” என்று பொறுமையாக பதிலளித்துள்ளார்.
இயக்குனராக "கோமாளி" என்ற வெற்றிப் படத்தையும், இயக்குனர் மற்றும் கதாநாயகனாக "லவ் டுடே" வெற்றிப் படத்தையும், நடிகராக "டிராகன்" என்ற வெற்றிப் படத்தையும் என அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்துள்ளவர் பிரதீப். அவரைப் பார்த்து ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்வி சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த், விஜய், தனுஷ் ஆகியோரும் ஆரம்ப காலத்தில் அவர்களது தோற்றத்தை வைத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்கள் தான். ஆனால், அதன் பின் அவர்கள் டாப் ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்தார்கள். இன்றும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதீப் நாயகனாக நடித்துள்ள "டியூட்" படம் அடுத்த வாரம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!