
பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் இதயக்கனிக்கு இன்று பொன்விழா
சத்யா மூவீஸ் தயாரிப்பான "இதயக்கனி" பிரமாண்டமான படமாக உருவாக்கப்பட்டது. ஹிந்தி நடிகை ராதா சலூஜா, வெண்ணிற ஆடை நிர்மலா, ராஜசுலோசனா, பண்டரிபாய், தேங்காய் சீனிவாசன், வி.கோபாலகிருஷ்ணன், மனோகர், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.சுப்பையா, ஐசரி வேலன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்தனர்.
ஆர்.எம்.வீரப்பனின் திரைக்கதையிலும் தயாரிப்பிலும் உருவானது இந்தப் படம். "மரத்தில் ஒரு கனி பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அது யாருடைய மடியில் விழுமோ, என்று நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக அந்தக் கனி, என் மடியிலேயே விழுந்துவிட்டது. விழுந்த கனியை எடுத்து பத்திரமாக நான் என் இதயத்தில் வைத்துக் கொண்டேன்" என்று எம்ஜிஆர் பற்றி அண்ணாதுரை பேசியதுடன் தொடங்கும் படம். ஒரு கொலைக் குற்றம் தொடர்பான புலனாய்வு படமாக வந்தாலும் எம்ஜிஆர் முன்னெடுக்க இருந்த அரசியலையும் நிறைய இடங்களில் பேசியது.
அதோடு பக்கா கமர்ஷியல் படமாகவும் உருவானது. "இன்பமே..." , "இதழே இதழே தேன் வேண்டும்", "தொட்ட இடமெல்லாம்" பாடல்கள் இன்றைக்கும் கண்ணை கவரும் கவர்ச்சி பாடல்கள்தான். ஒரு ஆங்கில பாடலை உஷா உதுப் பாடினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை ராஜாங்கத்தையே நடத்தினார்.
ஒகேனக்கல், பெர்க்காரா, பிச்சாவரம் என அழகான இடங்களில் படமாகி இருந்தது. பின்னாளில் வெள்ளை ரோஜா, மூன்று முகம், காதல் பரிசு என ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்த ஜெகநாதன் இந்த படத்தை இயக்கினார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!