
பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் என்.டி.ஆர்
திருப்பதிக்கு சாமி கும்பிட பஸ்களில் வரும் தெலுங்கு பக்தர்கள் அப்படியே சென்னை வந்து விடுவார்கள். அப்போது மாம்பலம் பசுல்லா ரோட்டில் என்.டி.ராமராவ் வீடு இருந்தது. ரோட்டில் பஸ்சை நிறுத்தி விட்டு திருப்பதியில் அடித்த மொட்டைத் தலையோடு ராமராவை பார்க்க காத்து கிடப்பார்கள். தினமும் காலையில் குளித்து பூஜையை முடித்ததும் ராமராவ் வீட்டின் முன்னால் வந்து முதலில் காண்பது தனது பக்தர்களான ரசிகர்களைத்தான். வீட்டு வாசலில் நிற்கும் காவலர்கள் இருபது இருபது பேராக பிரித்து உள்ளே அனுப்புவார்கள். அவர்கள் நேராக ராமராவ் காலில் விழுந்து வணங்குவார்கள். தங்கள் கோரிக்கைகளை எழுதி அவரது காலடியில் போட்டுவிட்டுச் செல்வார்கள். ரசிகர்கள் காலில் விழுந்து வணங்கும்போது ராமராவ் வானத்தை நோக்கி கையை உயர்த்தி இறைவனை வணங்குவார்.
பிற்காலத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் "இறைவனை வணங்குவது போல பக்கதர்கள் உங்கள் காலில் விழுந்து வணங்குவதை நீங்கள் எப்படி ஏற்றுக் கொண்டீர்கள்" என்று கேட்டபோது ராமராவ் சொன்னார். "அவர்கள் என் காலில் விழவில்லை. அந்த பகவான் காலில்தான் விழுந்தார்கள். அவர்கள் விழுந்து வணங்கும்போது நான் வானத்தை பார்த்து, இறைவா இவர்கள் என் காலில் விழவில்லை உன் காலில் விழுகிறார்கள் அதை ஏற்று அவர்களின் குறைகளை தீர்த்து வைப்பாயாக" என்று வேண்டுவேன். என்றார். அப்படி பூமியில் வாழ்ந்த கடவுளுக்கு இன்று 103வது பிறந்த நாள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!