
பிளாஷ்பேக் : முதல் பின்னணி பாடகி பி.ஏ.பெரிய நாயகி
1940ல் வெளியான "விக்ரம ஊர்வசி அல்லது ஊர்வசியின் காதல்" என்ற படத்தில் பெரியநாயகியின் அக்கா பி.ஏ.ராஜாமணிக்கு நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதே படத்தில் காந்தர்வக் கன்னியாகச் சிறு வேடத்தில் பாடி நடிக்கும் வாய்ப்பு பி.ஏ.பெரியநாயகிக்கு அமைந்தது. பின்னர் லேனா செட்டியார் தயாரிப்பில் டி.ஆர்.ரகுநாத் இயக்கிய "பிரபாவதி" படத்திலும் இணைந்து சிறு வேடங்களில் நடித்தார்.
1945ம் ஆண்டு, டி.ஆர்.மகாலிங்கம், குமாரி ருக்மணி நடித்த "ஸ்ரீவள்ளி" படத்தை தயாரித்தார் மெய்யப்ப செட்டியார். படம் முடிந்து முதல் பிரதியைத் திரையிட்டுப் பார்த்தபோது அதிர்ந்துபோனார். டி.ஆர்.மகாலிங்கத்தின் வெண்கலக் குரலுக்கு ஈடுகொடுக்கும் விதமாக குமாரி ருக்மணி பாடியிருந்த பாடல்கள் அமையவில்லை. படப்பெட்டிகள் அனைத்தும் தயாராகி, பிரதிகள் பல ஊர்களுக்கு அனுப்பிவிட்டிருந்த நிலையில் அவை அனைத்தையும் திரும்ப அனுப்ப சொல்லி தகவல் அனுப்பினார்.
அப்போதுதான் மும்பையில் "போஸ்ட் சிங்க்ரனைசேஷன்" முறையில் பின்னணி பாடும் தொழில்நுட்பம் அறிமுகமாகி இருந்தது. இதை கொண்டு வந்த செட்டியார் படத்தில் ருக்மணி பாடிய அனைத்து பாடல்களையும், பெரிய நாயகியை பாடவைத்து அதையே படத்தில் பின்னணி பாடலாக இணைத்தார். படம் பெரிய வெற்றி பெற்றது, பாடல்களும் பிரபலமானது. பி.ஏ.பெரிய நாயகி முதல் பின்னணி பாடகி ஆனார்.
அதன்பிறகு கீதகாந்தி, பஞ்சாமிர்தம், என் மனைவி, மனோன்மணி, மகாமாயா, பிரபாவதி, கிருஷ்ண பக்தி, தர்மவீரன், ஏகம்பவாணன், ருக்மாங்கதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!