
மதச்சான்று கேட்டதாக மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் மீது நடிகை நமீதா புகார்
அதில், தன்னை சாமி தரிசனம் செய்ய விடாமல் மன உளைச்சலை ஏற்படுத்தி அநாகரீகமாக நடந்து கொண்ட கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபுவை கேட்டு கொள்ளவதாக கூறினார்.
கோயில் ஊழியர்கள் கூறுகையில், "முகக்கவசம் அணிந்து வருவோரிடம் பாதுகாப்பு கருதி இதுபோல் கேட்பது நடைமுறை தான். அவர் நடிகை என்பது முன்கூட்டியே தெரியாது" என்றனர்.
கோயிலில் நடந்த சம்பவம் குறித்து நமீதா, அவரது கணவர் கூறுகையில், ‛‛மதுரை இஸ்கான் கோயிலில் தரிசனம் செய்து விட்டு கோயில் நிர்வாகிகளுடன் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றோம். கோயில் ஊழியர்கள், அதிகாரிகள் எங்களை தடுத்து "ஹிந்துவா, முஸ்லிமா" என கேள்வி எழுப்பி, "நீங்கள் முஸ்லிம் என தகவல் கிடைத்துள்ளது. எனவே ஹிந்து என்பதற்கான சான்றிதழ் காட்டுங்கள்" என்றனர்.
அப்போது ஆதார் அட்டையை காண்பித்த போதும் "அதில் மத அடையாளம் இல்லை" என கூறி அவமரியாதையாக பேசினர். 15 நிமிடங்களுக்கு மேல் வாக்குவாதம் செய்து காக்க வைத்தனர். குங்குமத்தை நெற்றியில் வைக்க சொல்லி உள்ளே அனுமதித்தனர். நாடு முழுவதும் பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளோம். பிறப்பால் நாங்கள் ஹிந்து. உரிய விளக்கம் அளித்தும் ஊழியர்கள் ஏற்கவில்லை.
இதுதொடர்பாக புகார் அளிக்க விரும்பவில்லை. கோயிலுக்கு வருபவர்களை கண்ணியத்துடன் வரவேற்க வேண்டும். தகுதியான அதிகாரிகள், ஊழியர்களை நியமிக்க வேண்டும். இவ்விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றனர்.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!