
தேசிய விருதில் மாற்றங்கள் அறிவிப்பு : பரிசுத் தொகை உயர்வு
இந்த குழு பரிந்துரைத்துள்ள முக்கியமான அம்சங்கள் வருமாறு : சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது என்ற விருதில் இந்திரா காந்தி பெயர் நீக்கப்பட்டு, "இயக்குனரின் சிறந்த அறிமுக படத்துக்கான விருது" என்று மாற்றப்பட்டுள்ளது. "தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது" என்ற விருதில் நர்கீஸ் தத் பெயர் நீக்கப்பட்டு. "தேசிய, சமூக, சுற்றுச்சூழல் கோட்பாடுகளை வலியுறுத்தும் சிறந்த படம்" என்று விருதின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இதுவரை தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்ட விருது பணம், இனிமேல் முழுமையாக இயக்குனருக்கு மட்டும் அளிக்கப்படும். திரையுலக ஆளுமைகளுக்கு வழங்கப்படும் "தாதா சாகேப் பால்கே" விருதுக்கான பரிசுத்தொகை 10 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல், பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் தங்கத்தாமரை விருதுக்கான பரிசுத்தொகை 3 லட்சமாகவும், வெள்ளித்தாமரை விருதுக்கான பரிசுத்தொகை 2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சிறந்த அனிமேஷன் படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் படம் ஆகியவை "சிறந்த ஏ.வி.ஜி.சி. படம்" என்ற ஒரே விருதாக வழங்கப்படும். சிறந்த ஒலிப்பதிவுக்கான விருது, சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான பரிசுத்தொகை 50 ஆயிரத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறந்த இசை இயக்கத்துக்கான விருது, சிறந்த பின்னணி இசை விருதாக மாற்றப்பட்டுள்ளது. சிறப்பு ஜூரி விருது நீக்கப்படுகிறது. "சிறந்த குடும்ப படம்" என்ற விருது நீக்கப்பட்டு, "சிறந்த திரைக்கதை" விருது அறிமுகப்படுத்தப்படுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!