
முண்டியடித்த ரசிகர் கூட்டம் : காருக்கு பதிலாக பைக்கில் கிளம்பிச் சென்ற லோகேஷ் கனகராஜ்
சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார் லோகேஷ் கனகராஜ். அவரது லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருவதால் இது அடுத்து அவர் இயக்க உள்ள படத்திற்கான கதை விவாதத்திற்காக இங்கே வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் அங்கு இருந்த தகவல் அறிந்து ரசிகர் கூட்டம் ஹோட்டலில் பெரிய அளவில் கூடியது.
அவர் கிளம்பும் தினத்தன்று மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் திரண்டு அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ளவும் லியோ பட அப்டேட் குறித்து கேட்டு தெரிந்து கொள்ளவும் முண்டியடித்ததால் அங்கிருந்து அவரது காரில் கிளம்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு ஹோட்டலை விட்டு வெளியேறினார் லோகேஷ் கனகராஜ். பின்னர் தொடர்ந்து வந்த தனது காருக்கு மாறிக்கொண்டார்.
இதற்கு முன்னதாக முதல் நாளன்று இரவு புதுச்சேரி பீச்சில் வாக்கிங் சென்றார் லோகேஷ் கனகராஜ். அப்போதும் ரசிகர்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டனர். அவருக்கு பாதுகாப்பாக ஐந்து பவுன்சர்கள் வந்திருந்தாலும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பாதியிலேயே வாக்கிங்கை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!