
டிரைலருக்கு வரவேற்பு : கழுவேத்தி மூர்க்கன் அருள்நிதியைக் காப்பாற்றுவாரா ?
கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த "டி பிளாக், தேஜாவு, டைரி" ஆகியவை விமர்சன ரீதியாக ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய வசூலைக் கடக்கவில்லை. இந்த ஆண்டில் அவர் நடித்து வெளிவந்த "திருவின் குரல்" படத்திலும் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படம் வெற்றிப்படமாக அமையவில்லை.அப்படம் வெளிவந்த ஒரு மாதத்திலேயே அவர் நடித்துள்ள அடுத்த படமான "கழுவேத்தி மூர்க்கன்" படம் இந்த வாரம் மே 26ம் தேதி வெளியாக உள்ளது.
மூன்று தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் யு டியுப் தளத்தில் வெளியானது. இரண்டு நாட்களிலேயே 50 லட்சம் பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு அருள்நிதி நடித்து வெளிவந்த "டி பிளாக்" படத்தின் டிரைலர் 50 லட்சம் பார்வைகளைக் கடந்தது. அதற்குப் பிறகு இப்படத்தின் டிரைலர்தான் அந்த அளவு பார்வைகளைக் கடந்துள்ளது.
ஜோதிகா நடித்த "ராட்சசி" படத்தை இயக்கிய சை கௌதம் ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த வாரம் வெளியாக உள்ள படங்களில் இந்தப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அருள்நிதி நடித்து வெளிவந்த "மௌன குரு, டிமாண்டி காலனி" படங்களின் வரிசையில் இந்தப் படமும் சேருமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!