
2023 - வெளியீட்டு அறிவிப்பு ; வெளியான முக்கிய படங்கள்
ரஜினிகாந்த் நடித்து வரும் "ஜெயிலர்" படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "கோலமாவு கோகிலா, டாக்டர்" படங்களை இயக்கிய நெல்சன் முதல் முறையாக ரஜினி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், சுனில், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
விஜய் நடித்து வரும் "லியோ" படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று படத்திற்கான தலைப்பை அறிவித்த முன்னோட்ட வீடியோவிலேயே அறிவித்துவிட்டார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணி "மாஸ்டர்" படத்திற்குப் பிறகு மீண்டும் இணைகிறது. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மேத்யூ தாமஸ், ப்ரியா ஆனந்த் என பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடித்து வரும் "மாவீரன்" படம் ஆகஸ்ட் 11ல் வெளிவரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ரஜினிகாந்தின் "ஜெயிலர்" படம் ஆகஸ்ட் 10ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டபின் "மாவீரன்" படத்தின் வெளியீட்டை மாற்றியமைத்து ஜுலை 14 வெளியாகும் என்று அறிவித்தார்கள். யோகிபாபு நடித்த "மண்டேலா" படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மிஷ்கின், சரிதா, சுனில், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள மற்றொரு படமான "அயலான்" படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராம்குமார் இயக்கித்தில் ஏஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். சில தடைகள், தாமதங்கள் என சிக்கலை சந்தித்த இப்படத்தின் அறிவிப்புத் தேதி வந்தது மகிழ்ச்சிதான். இந்த வருட தீபாவளி தினமான நவம்பர் 12 வெளியாகுமா அல்லது சில நாட்கள் முன்பாக வெளியாகுமா என்பதை அவர்கள் சரியான தேதியுடன் அறிவிக்கும் போது தெரிய வரும்.
இவை தவிர மற்ற ஹீரோக்களின் படங்கள் பற்றிய வெளியீட்டு அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!