
தமிழ் சினிமாவின் இளவரசியாக த்ரிஷா!
20 வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மாடலிங் துறையில் நுழைந்தவர் த்ரிஷா. டிவியில் தொகுப்பாளராகப் பணியாற்றி, ஒரு படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்து போனவர், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பது சாதாரண விஷயமல்ல.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல சூப்பர் ஹிட் படங்களிலும், பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தவர். ஒரு கட்டத்தில் தெலுங்கு சினிமாவை விட்டு விலகினார். தமிழிலும் சில படங்களில் மட்டுமே நடிப்பதைத் தொடர்ந்தார். 2018ல் வெளிவந்த "96" படம் அவரை "ஜானு, ஜானு" என ரசிகர்களால் தூக்கிக் கொண்டாட வைத்தது. அதற்கு முன்பு அவர் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் "ஜானு" கதாபாத்திரம் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரமாக அமைந்தது. இந்தப்படம் இன்றோடு வெளியாகி 4 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பிறகு இப்போது "பொன்னியின் செல்வன்" படத்தின் குந்தவை கதாபாத்திரம் அமைந்துள்ளது. தமிழில் தொடர்ச்சியாகப் பேசத் தடுமாறுபவர் இப்படத்தில் சொந்தக் குரலில் அந்தக் காலத் தமிழையும் சரியாக உச்சரித்து பாராட்டப்படுகிறார். ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்தவுடன் கதாநாயகிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கும் தமிழ் சினிமா நாற்பது வயதைத் தொட்டுள்ள த்ரிஷாவுக்கு விதவிதமான கதாபாத்திரங்களைக் கொடுத்து இன்றும் இளவரசியாக அழகு பார்க்கிறது.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!