
சிவகார்த்திகேயன் போல சித்தார்த்திற்கும் பெயர் கிடைக்குமா ?
நடிகர் சித்தார்த் தற்போது ஹிந்தியில் உருவாகியுள்ள "ஆபரேஷன் சேப்ட் சாகர்" என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் மறைந்த கார்கில் போர்வீரரும் குவாட்ரான் லீடருமான அஜய் அகுஜா என்பவரின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சித்தார்த். ஒனி சென் என்பவர் இயக்கியுள்ளார். 1999-ல் நடைபெற்ற கார்கில் போரின் போது இந்திய விமானப்படை மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க வான்வெளி நடவடிக்கையான "ஆபரேஷன் சேப்ட் சாகர்" என்பதை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.
இதில் மறைந்த ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து சித்தார்த் கூறும் போது, "ஆபரேஷன் சேப்ட் சாகர் தொடரில் நடிக்க ஆரம்பத்தில் எனக்கு தயக்கமாக இருந்தது. காரணம் கற்பனை கதாபாத்திரங்களில் நடிப்பது எளிது, ஆனால் நிஜ தியாகிகளின் கதாபாத்திரத்தில் நடிப்பது கடினம். நிஜ ஹீரோக்கள் பார்ப்பதற்கு சினிமா ஹீரோக்கள் போல இருப்பது இல்லை. எனவே யாருடைய நினைவுகளுக்கும் நான் அவமரியாதை செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இந்த கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மை மாறாமல் இருக்க இயக்குனரிடம் பலமுறை விவாதித்தேன். அது மட்டுமல்ல, அஜய் அகுஜாவின் மனைவியான அல்கா அகுஜாவிடம் இதற்கு ஒப்புதல் பெற்றுவிட்டீர்களா என்பதையும் உறுதி செய்து கொண்டே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.
அமரன் படத்தில் இதேபோல மறைந்த ராணுவ கதாபாத்திரத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு பேரும் புகழும் கிடைத்தது போல சித்தார்த்திற்கும் கிடைக்குமா ? பார்க்கலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!