
லியோ 2 வாய்ப்பில்லை: சொல்கிறார் ரத்னகுமார்
ஏப் 30, 2026
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கிய "கைதி, விக்ரம், லியோ" ஆகிய படங்கள் 2ம் பாகம் உருவாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. அதில் "கைதி 2" தான் முதலில் எடுக்கப்போவதாகவும், நடிகர் விஜய் சம்மதித்தால் "லியோ 2" எடுப்பேன் என்றும் லோகேஷ் பல பேட்டிகளில் சொல்லி வந்தார். ஆனால், இதுவரை "கைதி 2" துவங்கப்படவே இல்லை. அதற்குள்ளாக "டிசி" எனும் படத்தில் நாயகனாக நடிக்க போய்விட்டார் லோகேஷ். அதனை முடித்துவிட்டு, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படம் இயக்க போகிறார்.
இப்படியிருக்கையில் மேற்சொன்ன படங்களின் 2ம் பாகத்தை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து இயக்குனரும், "லியோ" படத்திற்கு திரைக்கதை எழுதியவருள் ஒருவரான ரத்னகுமார் பேசியதாவது: லியோ 2ம் பாகம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. "கைதி 2" படத்திற்கு பிறகே லியோ 2 எடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் கைதி 2 படமே இன்னும் துவங்கவில்லை. முதலில் லியோ படத்தின் ஓஎஸ்டி (ஒரிஜினல் சவுண்ட் டிராக்) வெளியாகட்டும், அதன்பிறகு லியோ 2 பற்றி பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
லோகேஷ் கனகராஜ், தனது நண்பரான ரத்னகுமாரின் உதவியுடனே தன்னுடைய சில படங்களுக்கு திரைக்கதை அமைத்துள்ளார். குறிப்பாக அவரின் "எல்சியு" கான்செப்ட், ரத்னகுமாருக்கு நன்றாகவே தெரியும். அவரே லியோ 2ம் பாகம் வாய்ப்பில்லை என சொல்லியிருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜய், "ஜனநாயகன்" தான் கடைசி படம் என கூறியிருக்கிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருவாரா முழு நேர அரசியலில் ஈடுபடுவாரா என்பதும் தெரியவில்லை.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!