
பிளாஷ்பேக்: விமானத்தில் கிடைத்த ஹீரோயின்
இயக்குநர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் 1964ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி வெளிவந்த படம் "காதலிக்க நேரமில்லை". முக்கோணக் காதல் கதைக்குப் பெயர் போன இயக்குநர் ஸ்ரீதர் இந்தப் படத்தில் காமெடியைக் கையில் எடுத்து விலா எலும்பு நோக சிரிக்க வைத்தார். முத்துராமனும் ரவிச்சந்திரனும் செய்யும் காமெடி கலாட்டாக்கள், அவர்களுக்கு இணையாக காமெடி செய்யும் காஞ்சனா, ராஜஸ்ரீ, "சினிமா எடுக்கிறேன்" என்று பாலையாவுக்குப் பேய் கதை சொல்லும் நாகேஷ், இன்னும் சச்சு, ராகவன் என்று இந்தப் படத்துக்கு உயிர் கொடுத்தவர்கள் பலர்.
இந்தக் காவியத்தை இசை மூலம் விஸ்வநாதன்--ராமமூர்த்தி மெருகேற்றினார்கள். "மாடி மேலே" , "என்ன பார்வை", " உங்கள் பொன்னான கைகள்", "அனுபவம் புதுமை", " நாளாம் நாளாம்", "மலரென்ற முகமொன்று", "காதலிக்க நேரமில்லை", " நெஞ்சத்தை அள்ளிஅள்ளித் தா" ஆகிய எட்டுப் பாடல்களும் இன்றும் என்றும் ரசிகர்களைக் கிறங்கடிக்கும் பாடல்கள்.
இப்படிப் பல பெருமை பெற்ற "காதலிக்க நேரமில்லை" படத்திற்கு ஹீரோயின் கிடைக்காமல் அவஸ்தைப் பட்டார் ஸ்ரீதர். காரணம் சீரியசான காதல் படங்களை எடுத்த ஸ்ரீதர் அதே காதலை காமெடியாக சொல்ல நினைத்தார். அழகாகவும், மார்டனாகவும் இருக்க வேண்டும். காமெடியும் வரவேண்டும். கேரளா, ஆந்திரா, மும்பைக்கு விமானத்தில் பறந்து பறந்து நாயகி தேடினார்.
அப்போது ஒரு விமான பயணத்தில் ஒரு இவர் கற்பனையில் இருந்த நாயகியை கண்டார். பேரழகு, கனிவான பேச்சு, பட்டென சிரிக்கும் முகம் அவர்தான் தன் படத்தின் நாயகி என்று முடிவு செய்தார். பெயரை கேட்டார் "வசுந்தரா" என்றார். "சினிமாவில் நடிக்க விருப்பமா" என்று கேட்டார். "எங்களோடது ஆச்சாரமான குடும்பம் விமான வேலைக்கே விடவில்லை. நான்தான் அவர்களிடம் கஷ்டப்பட்டு பர்மிஷான் வாங்கி வேலை செய்கிறேன். சினிமாவில் நடிப்பதற்கெல்லாம் சான்சே இல்லை சார்" என்றார்.
ஸ்ரீதர் விடவில்லை வசுந்தராவிடம் வீட்டு முகவரி வாங்கி, அடுத்த நாளே வீட்டுக்கு சென்று வசுந்தராவின் பெற்றோரிடம் பேசி சம்மதிக்க வைத்தார். ஏற்கெனவே அப்போது வசுந்தரா என்ற பெயரில் ஒரு நடிகை இருந்தால் இவருக்கு "காஞ்சனா" என்று பெயர் வைத்தார். விமானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காஞ்சனா பிற்காலத்தில் ஒரு விமானத்தையே வாங்கும் அளவிற்கு சம்பாதித்தார். அவற்றின் ஒரு பகுதியை ஆன்மீக பணிகளுக்கு செலவிட்டார்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…