
பிளாஷ்பேக்: படிக்காத மேதையை இயக்க மறுத்த ஸ்ரீதர்
நடிகர் திலகம் சிவாஜி நடித்த முக்கியமான படங்களில் ஒன்று "படிக்காத மேதை". "ஜோக் பியோக்" என்ற வங்க மொழி படத்தின் ரீமேக் இது. இந்த படத்தை முதலில் ஸ்ரீதர் இயக்குவதாக இருந்தது. வங்க மொழி படத்தை பார்த்த ஸ்ரீதர் "இந்த படம் தமிழ்நாட்டில் எடுபடாது. வேண்டுமானால் எனது உதவியாளர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கட்டும்" என்று கூறிவிட்டார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் படத்திற்கேற்ப தமிழ் வசனங்களை எழுதி படத்தை இயக்க முன் வந்தார்.
படத்தில் சிவாஜி நடிப்பதாக முடிவாகி, அவரும் படத்தை பார்த்தார். படம் தனக்கு பிடித்திருப்பதாகவும், ஆனால் நடிக்க வேண்டும் என்றால் பீம்சிங்தான் இயக்க வேண்டும். அவர்தான் இதற்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறிவிட்டார். இதனால் கே.எஸ்.கோபாகிருஷ்ணன் கழற்றி விடப்பட்டு பீம் சிங் இயக்கினார். ஆனால் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனம் பயன்படுத்தப்பட்டது. அதோடு இயக்குனராக அவருக்கு பேசப்பட்ட சம்பளமும் வழங்கப்பட்டது.
பணக்கார ராவ்பகதூர் சந்திரசேகர் (ரங்காராவ்) குடும்பத்தின் விசுவாச வேலைக்காரன் ரங்கன் (சிவாஜி), படிப்பறிவில்லாத அப்பாவி. ராவ்பகதூர் தொழிலில் நஷ்டமடைகிறார். குடும்பம் கடனில் மூழ்குகிறது. மகன்கள், மருமகள்கள், நண்பர்கள் என அனைவரும் சென்றுவிட, விசுவாச வேலைக்காரனும் வளர்ப்பு மகனுமான ரங்கன், பல அவமானங்களை கடந்து, குடும்பத்தை ஒன்றிணைப்பது கதை.
பி.கண்ணாம்பா, டி.எஸ்.துரைராஜ், முத்துராமன், டி.ஆர்.ராமச்சந்திரன், டி.கே.பாலச்சந்திரன், அசோகன், ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, ஈ.வி.சரோஜா, சகுந்தலா, சுந்தரிபாய் என பலர் நடித்தனர். கே.வி.மகாதேவன் இசை யில் உவான "எங்கிருந்தோ வந்தான்", "ஒரே ஒரு ஊரிலே", "படித்ததினால் அறிவு பெற்றோர்", "சீவி முடிச்சு சிங்காரிச்சு", "பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு", "உள்ளதை சொல்வேன் சொன்னதைச் செய்வேன்" உட்பட பாடல்கள் காலத்தை கடந்தும் நிலைத்து நிற்கிறது.
இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. தெலுங்கில், "ஆத்மபந்துவு" என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்தியில் "மெஹர்பான்" என்ற பெயரில் ரீமேக் ஆனது. தமிழில் இயக்கிய பீம்சிங் இந்தியிலும் இயக்கினார். அசோக்குமார், சுனில்தத் நடித்த இதை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!