
பிளாஷ்பேக்: 100வது நாளில் தயாரிப்பாளரை வித்தியாசமாக மகிழ்ச்சிப்படுத்திய சரோஜாதேவி
ஆக 12, 2026
Advertisement
ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் வாங்கி கொடுப்பது இந்தக் காலம். ஆனால் அந்த காலத்தில் சரோஜாதேவி என்ன செய்தார் தெரியுமா?
எம்ஜிஆர் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் தனது நண்பர் சின்ன அண்ணாமலைக்காக குறுகிய கால பட்ஜெட்டில் நடித்துக் கொடுத்த படம் "திருடாதே". நிறைய படம் நடிப்பதால், கிடைக்கும் நேரத்தில் அதாவது நாம் கூப்பிடுகிற நேரத்தில் வந்து நடித்துக் கொடுக்கிற மாதிரி ஒரு புதுமுகத்தை பாருங்கள் என்று எம்ஜிஆர் கூறிவிட்டார்.
தயாரிப்பாளர் சின்ன அண்ணாமலையும் அப்போது கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்து விட்டு தமிழில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த சரோஜாதேவியை கண்டுபிடித்தார். அப்போது அவர் "தங்கமலை ரகசியம்" படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார். அவரை வைத்து மூவி டெஸ்ட் எடுத்து அதை எம்ஜிஆரிடம் போட்டு காட்டினார்.
அதை பார்த்த எம்ஜிஆர் இந்த பெண் பெரிய அளவில் வருவார் என்பதை பார்த்த மாத்திரத்தில் கணித்தார். சரோஜாதேவியை எனது அடுத்த 3 படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறேன் என்றார் சின்ன அண்ணாமலை. அதில் ஒரு படத்தை எனக்கு கொடுத்து விடுங்கள் என்று அப்போதே கேட்டு வாங்கி வைத்துக் கொண்டார் எம்ஜிஆர். அந்த படம்தான் "நாடோடி மன்னன்".
"திருடாதே" படம் பெரிய வெற்றி பெற்றது. 100வது நாளும் சிறப்பாக நடந்தது. படத்தின் 100வது நாள் அன்று காலை சரோஜாதேவி நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப்பழம் ஆகியவற்றை சீராக வைத்து தன்னை அறிமுகப்படுத்திய சின்ன அண்ணாமலையை அவரது வீடு தேடிச் சென்று பார்த்து ஆசி வாங்கிக்கொண்டார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!