
துல்கர் சல்மான், நயன்தாரா பிடிக்கும்: வரலட்சுமி நிகழ்ச்சியில் பி.வி.சிந்து
பிக்கிள்பால் விளையாட்டில் சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். இந்த அணியில் தமிழ்நாடு பிரீமியர் பிக்கிள்பால் லீக் (TNPPL) தொடரின் இரண்டாவது சீசனை முன்னிட்டு, புதிய ஜெர்சி அறிமுகவிழா சென்னையில் நடந்தது. இதில் பாட்மிண்டன் உலக சாம்பியன் பி.வி. சிந்து மற்றும் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு ஜெர்சியை வெளியிட்டனர்.
மகளுக்காக நடிகர் சரத்குமாரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தி பேசினார். பி.வி.சிந்து பேசுகையில், "இந்தியாவில் பிக்கிள் பால் விளையாட்டு அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற தொடர்கள் விளையாட்டை மேம்படுத்துவதுடன், மக்களையும் ஒன்றிணைக்கின்றன. சரத்குமார் மற்றும் வரலட்சுமியின் படங்களை நான் பார்த்து இருக்கிறேன். வரலட்சுமியை பிடிக்கும். அதனால் இந்த விழாவுக்கு வந்தேன். நடிகர்களில் துல்கர் சல்மான் பிடிக்கும். நடிகைகளில் நயன்தாரா பிடிக்கும்"" என்றார்.
ஜோஷ்னா சின்னப்பா பேசும்போது: ""டிஎன்பிபிஎல் தொடர் புதிய திறமையாளர்களை உருவாக்க ஒரு சிறந்த தளம். தமிழ் டைட்டன்ஸ் அணியின் இந்த பயணத்தில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். எனக்கு நடிகர்களில் பிரபுதேவா, ஜோதிகா பிடிக்கும்"" என்றார்.
சரத்குமார் பேசும்போது: "விளையாட்டுக்கு மக்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல் உண்டு. தமிழ் டைட்டன்ஸ் அணியின் இந்த அறிமுக சீசனில் அவர்களுடன் இணைந்திருப்பதை பெருமையாகக் கருதுகிறேன். சமீபத்தில் மண்டாடி படம் பார்த்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. இப்போது நல்ல விஷயங்களை பாராட்ட வேண்டும். என் வயது 72. ஆனாலும் உற்சாகமாக இருக்கிறேன். சமீபத்தில் கேரளாவில் நடந்த படகுபோட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றேன்"" என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!