
பாட்ஷா, பேட்ட 2ம் பாகத்தை மறுத்து ஜெயிலர் 2 மட்டும் ஏன்?: ரஜினி பேச்சு
அக் 11, 2026
Advertisement
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள படம் "ஜெயிலர் 2". அக்டோபர் 15ம் தேதி ரிலீசாகிறது. ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்ணா, ரித்விக் ஆகியோருடன் எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2023ல் ரிலீசான "ஜெயிலர்" படத்தின் தொடர்ச்சியான இப்படத்தின் ரிலீசுக்கு முந்தைய விழாவாக "சூப்பர் ஷோ" நிகழ்ச்சியை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இதில், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் பங்கேற்றனர்.
விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது: வழக்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தான் இசை வெளியீட்டு விழா நடத்துவோம். இந்த முறை ஒரு மாற்றத்திற்காக வேற மாதிரி நடத்த திட்டமிட்டோம். ஆனாலும் ரசிகர்களை சந்திக்க முடியாதது எனக்கு வருத்தம்தான். "ஜெயிலர் 2" படத்தை தொடர்ச்சி (சீக்வல்) என்று சொல்லமாட்டேன். சீக்வல் என்றாலே சரக்கு கம்மியாகிடுச்சு , கிரியேட்டிவிட்டி கம்மியாகிடுச்சு என்று சொல்வார்கள்.
நான் நடித்த "பாட்ஷா" படத்தின் 2ம் பாகம் எடுக்கலாம் என்றனர்; நான் மறுத்துவிட்டேன். அதேபோல் "பேட்ட" படத்தின் இரண்டாம் பாகம் கதையை கார்த்திக் சுப்பராஜ் சொன்னார். அதிலும் எனக்கு அந்த உடன்பாடு வரவில்லை. "ஜெயிலர்" திரைப்படம் வெளியாகி படம் ஓடிடியில் வெளியானபோது இன்னொரு முறை படத்தைப் பார்த்தேன். அப்போது படத்தில் பல இடங்களில் இரண்டாம் பாகத்திற்கான ஹிண்ட் கொடுத்திருந்தார் நெல்சன். இது ஒரு பெரிய நெட்வொர்க் என வர்மன் கதாபாத்திரம் படத்தில் சொல்வார். "ஜெயிலர்" கதாபாத்திரத்தை நெல்சன் உருவாக்கியிருக்கும் விதமும் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு சரியாக இருந்தது. அதேபோல் இந்த படத்தில் நான் என்னுடைய வயதை ஒத்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன்.
"ஜெயிலர் 2" படம் பண்ணலாம் என்று நெல்சனிடம் கேட்டபோது அவர் அதை மறுத்துவிட்டார். ஆனால் ஒரு மாதத்திற்கு பின் எனக்கு போன் செய்து "ஜெயிலர் 2" படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். படத்தின் கதையை எழுத சில மாதங்கள் அவகாசம் கேட்டுவிட்டு பொறுமையாக கதையை எழுதி வந்தார். அப்படி உருவான "ஜெயிலர் 2" படத்தைதான் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!