
சர்ச்சையில் சிக்கிய நடிகர் விக்ரம் : அரிய வகை குரங்கை வளர்ப்பதா என எதிர்ப்பு
நடிகர் விக்ரம் தனது செல்லப் பிராணியாக அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை மனித குரங்கு லார் கிப்பன் குட்டியை வளர்த்து வருகிறார். அவர் இந்த அரிய வகை குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். வீடியோ வைரலாக பரவிய நிலையில் அரிய வகை குரங்கை வீட்டில் வளர்ப்பதற்கான அனுமதி சான்று விக்ரம் வைத்துள்ளாரா என வனத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
ஆவணங்களின் அடிப்படையில், அந்த அரியவகை குரங்கு குட்டியை முதலில் மணிப்பூரைச் சேர்ந்த லைகுராம் சிங் என்பவர் வைத்திருந்தாக தெரியவந்துள்ளது. லைகுராம் சிங், 8 லார் கிப்பன் குரங்கு குட்டிகளை வளர்ப்பதற்கான அனுமதி சான்று வைத்திருந்ததாகவும், அவற்றின் பூர்வீக நாடு மலேசியா எனவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. லைகுராம் சிங் தன்னிடம் இருந்த குரங்கு குட்டிகளில் மூன்றை, ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த எஸ்.கே. கேசவநாதனுக்கு வழங்கியுள்ளார். அவற்றில் ஒன்றுதான் தற்போது நடிகர் விக்ரம் வீட்டில் பராமரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
தற்போது வீடியோவை நடிகர் விக்ரம் நீக்கிவிட்டாலும் சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. லார் கிப்பன் அரிய வகை குரங்கு, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பிராணியாகும். இத்தகைய விலங்குகளை வீட்டில் வளர்ப்பது மற்றும் கூண்டில் அடைப்பது தவறு என்று விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
லார் கிப்பன் குரங்குகள் மரங்களில் வாழும் விலங்குகள்; அவை சுதந்திரமாக நடமாடுவதற்கு பெரிய மரங்கள் தேவைப்படுகின்றன. அத்தகைய விலங்குகளை கூண்டில் அடைத்து வைப்பது, அதன் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என இயற்கை ஆர்வலர்கள், நடிகர் விக்ரமுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று அரிய வகை விலங்கினங்கள் இன்னும் யார் யாரிடம் உள்ளது, இந்த பரிமாற்றத்தில் தொடர்புடைய நபர்கள் யார், அரிய வகை வன விலங்குகளை கடத்தும் கும்பல் அல்லது இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் கும்பலுக்கு இதில் தொடர்புள்ளதா என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!