
வீண் வதந்தி பரப்புகிறார்கள்... நடிகர் சூரி வேதனை
சூரி அளித்த பேட்டியில், அம்மன் ஹோட்டல் குழுமம் மீது நான்கு நாட்களாக தவறான ஒரு தகவல் பரப்பப்படுகிறது. எதனால் இந்த காழ்ப்புணர்ச்சி என தெரியவில்லை. மதுரை அரசு மருத்துவமனையில் சில தன்னார்வலர்கள் வழங்கும் அன்னதானத்தால் நாய்கள் சுற்றி திரிவது, உணவு வீணாவதால் சுகாதாரக் கேடு போன்ற இன்னும் சில பிரச்சனைகள் எழுந்ததால் மாவட்ட நிர்வாகமும், அரசு மருத்துவமனை நிர்வாகமும் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அன்னதானம் வழங்க தடை விதித்துள்ளது. ஆனால் மருத்துவமனைக்கு வெளியில் அன்னதானம் வழங்கலாம் எனக் கூறியுள்ளது. இந்தப் பிரச்சனைக்கும், மதுரை அரசு மருத்துவமனையில் சேவை நோக்கத்துக்காக திறக்கப்பட்ட அம்மன் ஹோட்டல் நிர்வாகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
என் அம்மா ஒரு முறை மருத்துவமனைக்குச் சென்று விட்டு அங்கு சரியில்லாத உணவு வழங்கப்பட்டதால் காசு செலவை பார்க்காமல் அங்கு தரமான உணவு குறைந்த விலையில் வழங்கும்படி கேட்டுக் கொண்டார். அப்போது அரசு மருத்துவமனையில் ஹோட்டல் நடத்த நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதால் லாப நோக்கம் பார்க்காமல் குறைந்த விலையில் தரமான உணவு அங்கு வழங்கப்படுகிறது. தற்போது அங்கு மருந்து கொடுப்பவரும் சரி மருந்து எடுப்பவரும் சரி, டாக்டர்களும் நோயாளிகளும் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவு எடுக்கின்றன.
அந்த அளவுக்கு சேவை மனப்பான்மையோடு உணவு வழங்கும் நான் மற்றவர்களுக்கு உணவு வழங்குவதை அம்மன் ஓட்டல் குழுமம் தடுக்குமா, இந்த விஷயத்தில் தேவையில்லாமல் சூரியன் ஓட்டல் என்ற ஒரே காரணத்திற்காக சிலர் வீணான வதந்திகளை கிளப்பி விடுகின்றனர். இது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையில் அன்னதான வழங்க தடை விதித்ததற்கும், எனக்கும் எந்த அளவு எள்ளளவும் சம்பந்தமில்லை என்பது மட்டுமே உண்மை.
இவ்வாறு சூரி தெரிவித்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!