விமர்சனம்
தமிழில், இந்திய சினிமாவில் மட்டுமல்ல, உலக சினிமாவில் கூட இப்படிப்பட்ட படம் வந்திருக்கிறதா என்பது சந்தேகம்தான். அந்த 5 நண்பர்களாக நடித்தவர், படத்தை இயக்கியவர், ஒளிப்பதிவு செய்தவர், எடிட்டர், மேக்கப்மேன், காஸ்ட்யூம் டிசைனர், லைட்மேன், கிராபிக்ஸ் வல்லுனர் என அனைவரும் ஒருவரே. இப்படியாக ஒருவர் மட்டுமே 74 துறைகளை இயக்கி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அந்த நபரின் பெயர் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார். இதற்குமுன்பு இவர் வெங்காயம் படத்தை இயக்கியவர்.
ஒருவரே நடித்த, இப்படி புதுமுறையில் உருவாக்கிய படம் என்பதால் 5 ஆண்டுகளாக எடுத்து இருக்கிறார். 5 நண்பர்கள் கேரக்டரில் ஒருவர் வில்லன், ஒருவர் அப்பாவி, ஒருவர் டிரைவர், ஒருவர் குறும்புகாரர் என மாறுபட்ட கேரக்டர்களாக வடிவமைத்து நடித்து இருக்கிறார். தவிர, அம்மாவாக வருபவர், விஞ்ஞானி கூட அவரேதான். ஒரு சில சீன்கள், ஒரு சில கேரக்டர் நடிப்பு ஓகே.
உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பால் அப்படியே ஸ்தம்பிக்க வைத்துவிட்டு, அவர்கள் ரயிலில் போவது, அதில் ஏற்படும் விபத்து, அடுத்து அமெரிக்கா போவது, அங்கே ஏற்படும் திருப்பங்கள், அங்கிருந்து ஹெலிகாப்டர், விமானத்தில் இந்தியா திரும்புவது என்பதெல்லாம் வித்தியாசமான திரைக்கதையாக தெரிகிறது. ஒன்றரை மணி நேரத்தில் படம் முடிந்தாலும் பல டுவிஸ்ட். கடைசியில் உலகில் தனி மனிதர்களால் வாழ முடியாது. மனிதர்களுடன்தான் வாழ முடியும். மனிதநேயம் முக்கியம் என்ற கருவில் படம் முடிகிறது.
அந்த ரயில் விபத்து, அமெரிக்காவில் சாகசம், சண்டை, ஹெலிகாப்டர் சண்டை ஆகியவை வியப்பூட்டுகிறது. காடு, விஞ்ஞான ஆய்வகம், ரயில், அமெரிக்கா காட்சிகள், சண்டையை எப்படி ஒருவரே இயக்குனர் என்ற ஆர்வமும், வியப்பும் ஏற்படுகிறது. பட்ஜெட் காரணமாக கிராபிக்ஸ், நடிப்பு உள்ளிட்ட விஷயங்களில் சில குறைகள் இருந்தாலும், ஒருவரே நடித்து இருப்பது ஆங்காங்கே சோர்வை தந்தாலும், அளவுக்கு அதிகமான கற்பனை கதையாக இருந்தாலும் இப்படிப்பட்ட புதுமை, சாதனை, உழைப்புக்காக ஒன்மேனை பார்க்கலாம், பாராட்டலாம்.
5 மாறுபட்ட கேரக்டர்களை உருவாக்கியவர் கெட்அப், மேக்கப், நடிப்பில் கொஞ்சம் புதுமை காண்பித்து இருந்தால் இன்னும் படத்தை வெகுவாக ரசித்து இருக்கலாம். டப்பிங்கிலும் தனி கவனம் செலுத்தவில்லை. ஆனாலும், படம் முடிந்தபின் இந்த படத்தை தனி மனிதனாக எப்படி எடுத்தேன் என்று மேக்கிங் வீடியோவை காண்பிக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். அது படத்தை இன்னும் அழகாக இருக்கிறது. அவரின் உழைப்பை, கஷ்டத்தை, ஆர்வத்தை காண்பிக்கிறது. ஒன் மேன் உண்மையில் ஒரேஒரு மேன்-ஆல் எடுத்த சாதனைப் படம் தான். புதுமையை விரும்புகிறவர்களுக்கு, சினிம பிரியர்களுக்கு படம் பிடிக்கும். மற்றவர்கள் விமர்சனங்கள் செய்யலாம். குறைகளை கண்டுபிடிக்கலாம். இவ்வளவு பெரிய உலகில் 5 பேர் மட்டும் வசித்தால் எப்படி இருக்கும் என்ற வித்தியாசமான கற்பனை.
ஒன் மேன் - ஆச்சர்யம்
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!