சன்னிதானம் பி.ஓ
விமர்சனம்
தயாரிப்பு: சர்வதா சினி கரேஜ் & ஷிமோகா கிரியேஷன்ஸ்
இயக்கம்: அமுதா சாரதி
நடிப்பு: யோகிபாபு, சித்தாரா, மூணாறு ரமேஷ், கஜராஜ், வர்ஷா
ஒளிப்பதிவு: வினோத்பாரதி
இசை: அருண்ராஜ்
வெளியான தேதி: ஜூன் 5, 2026
நேரம்: 2 மணி 10 நிமிடங்கள்
ரேட்டிங்: 2 / 5
சபரிமலை ஐயப்பன் சன்னிதானம், சுற்றுவட்டாரத்தில் கதை நடப்பதால் இந்த தலைப்பு. வாய் பேசாத முடியாத சித்தாரா சபரிமலை சன்னிதானம் போஸ்ட் ஆபீஸ் அருகில், இருமுடி கட்டி செல்லும் தனது சிறுவயது மகனை தொலைக்கிறார். சூழ்நிலை காரணமாக அவருக்கு திருடி பட்டம் கட்டி, போலீஸ் ஜெயிலுக்கு அனுப்புகிறது. அந்த சிறுவன் பல இடங்களில் சுற்றி, கடைசியில் ஒரு சமையல்காரராக வளர்ந்து நிற்கிறான். அதுதான், யோகிபாபு. போலீஸ்காரர் கஜராஜ் வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் சித்தாரா மகனை தொடர்ந்து தேடி வருகிறார். ஒரு கட்டத்தில் கஜராஜ் மகளான ஹீரோயின் வர்ஷாவும் தேட, ஆரம்பிக்க, பல ஆண்டுகளுக்குபின் அம்மாவும், மகனும் சேர்ந்தார்களா? என்பது அமுதாசாரதி இயக்கிய சன்னிதானம் பி.ஓ(போஸ்ட்) படத்தின் கரு.
சபரிமலை பின்னணியில் வந்தாலும், சன்னிதானம் பி.ஓ என தலைப்பு இருந்தாலும் இது பக்தி படமல்ல, அம்மா, மகன் பாசத்தை சொல்லும் கதை. அவ்வப்போது சபரிமலை காட்சிகள், ஐயப்பன் காண்பிக்கப்படுகிறார். தொலைந்துபோன மகனை தேடும் கதையை பல படங்களில் பார்த்து இருந்தாலும், இதில் கொஞ்சம் புதுமையும் இருக்கிறது. அம்மாவாக நடித்துள்ள வாய் பேச முடியாத சித்தாராவை சுற்றியும், மகனாக நடித்துள்ள யோகிபாபுவை சுற்றியும் கதை நடக்கிறது. அம்மா பாசத்தில் மனதை நெகிழ வைக்கிறார் சித்தாரா. மகள் காணாமல் போகும்போது அவர் தேடுகிற இடங்கள், போலீசில் சிக்கி தவிக்கிற இடங்கள், கிளைமாக்சில் நடிப்பில் கவர்கிறார். மீதி நேரங்களில் சோகமாக இருக்கிறார் அல்லது தியானம் பண்ணுகிறார். அவருக்கான எமோஷனல் சீன்களை இன்னும் நன்றாக எடுத்து இருக்கலாம். குறிப்பாக, கிளைமாக்சில் அவர் நடிப்பு சுமார். அவருக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. அந்த திருப்பங்கள் கதைக்கு பிளஸ்.
சமையல்காரராக தனது வழக்கமான ஸ்டைலில் காமெடி செய்து கொண்டு, ஒன்றிரண்டு பன்ச் டயலாக் அடித்துகொண்டு சுமாராக நடித்து இருக்கிறார் யோகிபாபு. இந்த கதையும், அவருக்கான கேரக்டரும், அவருக்கு சுத்தமாக செட்டாகவில்லை. அம்மா, மகன் பாசக்காட்சிகளில், கிளைமாக்சில் அம்மாவுடன் சேரும் இடங்களில் கூட அவர் ஏனோதானோவென நடித்து இருக்கிறார். காமெடியும் பெரிதாக சிரிப்பு வரவழைக்கவில்லை. சித்தாரா அம்மா, யோகிபாபு மகன், மூணாறு ரமேஷ், சித்தாரா ஜோடி என்ற காம்பினேசனே வொர்க் அவுட் ஆகவில்லை.
இந்த கதையில் இன்னொரு அப்பா, அம்மா கதை, இன்னொரு அண்ணன், தம்பி கதையும் இணைகிறது. அனைத்திற்கும் கிளைமாக்சில் விடை கிடைக்கிறது. ஹீரோயின் வர்ஷாவுக்கும், யோகிபாபு தம்பியாக வரும் ரூபேசுக்கும் காதல் மலர்கிறது. அதில் அழுத்தம் இல்லை. போலீசாக வரும் கஜராஜ், யோகிபாபு தந்தையாக வரும் மூணாறு ரமேஷ் ஓரளவு நடித்து இருக்கிறார்கள். மற்றபடி கேரளாவில் படப்பிடிப்பு நடத்தியதால் மலையாள வாடை அதிகம் இருக்கிறது. சபரிமலை, சன்னிதானம் என்று சொல்லி, வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். சபரிமலையின் ஆன்மிக அழகு, ஐயப்ப பக்தர்கள் கோஷம், அவர்கள் பயணம் விரிவாககாண்பிக்கப்படவில்லை. ஒருமுக்கியமான இடத்தில் வரும் ஏறி வந்தோம் ஐயப்பா பாடல் மனதில் நிற்கிறது. கடவுள் மாதிரி ஒருவர் வருகிறார். அவருக்கான சீன்களை அதிகப்படுத்தி கதையை பக்திமயமாக நகர்த்தியிருக்கலாம். அஜினுஐயப்பாவின் கதை ஓகே. ஆனால், அதை எடுத்தவிதம் ரொம்பவே சுமார். படம் முடியும்போது ஐயப்ப பக்தியோ, ஆன்மிக உணர்வோ, அம்மா, மகன் பாசமோ வராதது சோகம்.
சன்னிதானம் பி.ஓ - ஐயப்பன் பக்தியை, அம்மா சென்டிமென்டை சொல்லும் கதை
பட குழுவினர்
சன்னிதானம் பி.ஓ
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
Subscription















