பரிமளா அண்ட் கோ
விமர்சனம்
தயாரிப்பு: ஜிகேஎம் தமிழ்குமரன்
இயக்கம்: பாண்டிராஜ்
நடிப்பு: ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், சாண்டிமாஸ்டர், சஞ்சனா, அனந்திகா
ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி வில்லியம்ஸ்
இசை: பாக்ஸன்
வெளியான தேதி: ஜூன் 5, 2026
நேரம்: 2 மணி 18 நிமிடங்கள்
ரேட்டிங்: 2 / 5
சென்னையில் மனைவி ஊர்வசி, மகள் சஞ்சனா, அனந்திகாவுடன் நடுத்தர குடும்பத்தை நடத்தி வருகிறார் ஜெயராம். லோக்கல் ரவுடி கம் போதை பொருள் விற்பவரான சாண்டிமாஸ்டர், ஜெயராம் இளைய மகளை துரத்தி, துரத்தி காதலிக்கிறார். அதை தட்டிகேட்கும் மூத்த மகள் சஞ்சனா மீது ஆசிட் அடித்துவிடுவேன் என மிரட்டுகிறார். சாண்டி மாஸ்டர் தொல்லையில் இருந்து தங்களை பாதுகாக்க, அவரை கொலை செய்து விடலாம் என ஒட்டு மொத்த குடும்பமும் நினைக்கிறது. ஒரு தீபாவளி நாளில் சாண்டி மாஸ்டர் கொடூரமாக கொலை செய்யப்பட, இன்ஸ்பெக்டர் மிஷ்கின் அந்த வழக்கை விசாரிக்கிறார். சாண்டியை கொன்றது யார்? ஏன்? அதை மிஷ்கின் கண்டுபிடித்தாரா? பரிமளா அண்ட் கோ அந்த வழக்கில் இருந்து தப்பித்ததா? என்பது படத்தின் கதை. ஜெயராம் கேரக்டர் பெயர் பரிமளா.
குடும்பபாங்கான கதை சொல்வதில் வல்லவரான பசங்க பாண்டிராஜ் இதிலும் ஒரு குடும்ப கதையை சொல்லியிருக்கிறார். ஆனால், முதன்முறையாக அதில் கொலை, விசாரணை, திரில்லர் எலிமென்ட்டை இணைத்து இருக்கிறார். பரிமளா என்ற பெயர் காரணம் சொல்வதில் தொடங்கி, கிளைமாக்ஸ்வரை தனது அனுபவத்தால் நடிப்பில் கவர்கிறார் ஜெயராம். அவ்வப்போது அவர் அடிக்கிற காமெடி, போலீஸ் விசாரணைக்கு பயந்து உளறுவது, குடும்ப உறுப்பினர்களிடம் கொலை பற்றி பேசுவது ரசிக்க கூடிய சீன்கள். குறிப்பாக, ஜெயராம், ஊர்வசி காம்பினேஷன் செட்டாகி இருக்கிறது. அதற்காக 'பஞ்சதந்திரம், தெனாலி' அளவுக்கு ஜெயராமை நினைக்க கூடாது. அது வேற, இது வேற. ஜெயராமை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.
ஜெயராம் மனைவியாக சுதந்திரம் கேரக்டரில் வரும் ஊர்வசியும், தனக்கென உரிய தனித்தன்மை நடிப்பு, டயலாக் டெலிவரியில் ஸ்கோர் செய்து இருக்கிறார். போலீஸ் விசாரணையில் அவர் அடிக்கிற லுாட்டி, குடும்ப உறுப்பினர்களுடன் அவர் பேசுகிற டயலாக் செம. ஜெயராம், ஊர்வசி தம்பதியினர் மகள்களாக வரும் சஞ்சனா, அனந்திகா படத்தின் பிளஸ். பக்கத்து வீட்டு, நம்ம வீட்டு டீன் ஏஜ் பெண் குழந்தைகளை பார்ப்பது மாதிரி இருக்கிறது. கொஞ்சம் தில்லான பெண்ணாக சஞ்சனாவும், அப்பாவிதனமான கேரக்டரில் அனந்திகாவும் கிடைக்கிற இடங்களில் கலக்கியிருக்கிறார்கள். இவர்களின் காதல் கதைகள், அதில் ஏற்படும் பிரச்னைகள் சுவாரஸ்யம்.
போலீஸ் இன்ஸ்பெக்ராக வரும் மிஷ்கின் தன் பாணியில் ரசிகர்களை ஈர்க்கிறார். அடாவடி, தெனாவட்டு, காமெடி கலந்த கேரக்டரில் வருகிறார். கிளைமாக்சில் அவருக்கு இன்னொரு முகம். என்ன, கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கை குறைத்து இருக்கலாம். இவர்களை தவிர, சாண்டி மாஸ்டர் கேரக்டரும், அவர் செய்கிற அட்டகாசமும் கதையுடன் ஒட்டி போகிறது. இவர்களை தவிர, யோகிபாபு இருக்கிறார். ஆனால், காமெடி இல்லை. காமெடி பண்ணாமலே காமெடியனாக அவர் நடித்த படங்களில் இதுவும் ஒன்று. சிங்கம்புலி, பக்ஸ் என பலர் இருந்தாலும் சிரிப்பு வர மறுக்கிறது. பூர்ணிமா சில சீன்களில் வந்தாலும், அது தேவையில்லாத சீனாகிவிடுகிறது. கதையில் ஆங்காங்கே மிஷ்கினுடன் ஒரு சப் இன்ஸ்பெக்டர் வருகிறார். அவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. அவர் நடிக்கவே இல்லை. அவர் படத்தின் தயாரிப்பாளர் தமிழ்குமரன்.
ஒரு கொலை வழக்கில் சிக்கிக்கொள்ளும் நடுத்தர குடும்பம், போலீஸ் விசாரணை இதெல்லாம் 'பாபநாசம்' படத்திலேயே பார்த்தாகிவிட்டது. இதில் புதுமை இல்லை. அதிலும் காமெடி என்ற பெயரில், குடும்ப கதை என்ற பெயரில் பேசியே டயர்டு ஆக்குகிறார்கள். பக்கம், பக்கமாக டயலாக் கொடுத்து, நம் பொறுமையை சோதித்து இருக்கிறார் பாண்டிராஜ். சில இடங்கள் வொர்க் அவுட் ஆகி சிரிப்பை தந்தாலும், பல இடங்கள் கதையுடன் செட்டாகவில்லை. படத்தில் காண்பிக்கப்படும் காமெடி சீன், பின்னணியும் 10, 20 ஆண்டுகளுக்கு முந்தையது. அதுவே படத்தின் மைனஸ் ஆகிவிட்டது. வசனங்கள், சீன்கள், கேரக்டர் நடிப்பு பல இடங்களில் ஒரே கோட்டில் இணையவில்லை. அது, படத்தை பலவீனமாக்குகிறது. படத்தில் ஏகப்பட்ட தேவையில்லாத சீன்கள்.
ஒரு கொலை வழக்கு விசாரணை என்பது நல்ல கரு. ஆனால் படம் இடைவேளைக்குபின் எங்கேயோ சுற்றி, சுற்றி வருகிறது. கிளைமாக்சில் இன்னொரு திருப்பம். அந்த இடங்கள் போராடிக்கிறது. சாண்டியை கொன்றது யார் என்ற திரில்லர் விஷயத்தில் பரபரப்பு, புதுமை இல்லை. இந்த விஷயத்தில் பாண்டிராஜ் திரைக்கதை ரொம்பவே வீக். பொதுவாக அவர் படங்களை குடும்பத்துடன் பார்க்கலாம். இதில் பெண் குழந்தை ஒயின் அடிக்கிற காட்சி, அதற்கு நியாயமும் இருக்கிறது. சாண்டி அம்மா காயத்ரி கேரக்டர், கள்ளக்காதல் விஷயங்களும் முகம் சுளிக்கவைக்கிறது. பெண்களுக்கு எதிரான டீசிங், போதை பாதிப்பை அழுத்தமாக சொல்ல நினைத்து, அதை சரியாக சொல்ல முடியாமல் விட்டு இருக்கிறார்கள். பல சீன்களில் உண்மைதன்மை இல்லை, ஓவர் சினிமாதனம். நாம் எடுத்தால் மக்கள் ரசிப்பார்கள் என்ற மனநிலையில் படத்தை இயக்கி இருக்கிறார் போல.
ஜார்ஜ் ஒளிப்பதிவு ஓகே. ஆனால், பாடல்கள் சுமார். பாண்டிராஜ் கதைகளில் ஒரு எமோஷன் டச் இருக்கும். கிளைமாக்சில் நிறைவு இருக்கும். படத்தில் இருந்து வீட்டுக்கு எடுத்து செல்ல ஒரு விஷயம் இருக்கும். அதெல்லாம் பரிமளாவில் மிஸ்சிங். இடைவேளைக்குபின் நடிகர்களை இஷ்டத்துக்கு நடிக்கவிட்டு, இஷ்டத்துக்கு படத்தை எடுத்துவிட்டார்களோ என தோன்றுகிறது. ஜெயராம், ஊர்வசி கூட்டணியில் வந்தபடம், பாண்டிராஜ் படம் என நம்பி சென்றால், அட, போங்கப்பா.
பரிமளா அண்ட் கோ - காமெடி கலந்த திரில்லர் படம். இரண்டுமே அரைகுறை
பட குழுவினர்
பரிமளா அண்ட் கோ
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
Subscription


தலைவன் தலைவி
எதற்கும் துணிந்தவன்
நம்ம வீட்டுப் பிள்ளை
கடைக்குட்டி சிங்கம்











