அகண்டா 2: தாண்டவம்,Akhanda 2: Thandavam
Advertisement
3.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு: 14 ரிலீஸ் பிளஸ்
இயக்கம்: போயபதி சீனு
நடிப்பு: பாலகிருஷ்ணா, சம்யுக்தா மேனன், ஆதி,
ஒளிப்பதிவு: ராம் பிரசாத்
இசை: தமன்
வெளியான தேதி: டிசம்பர் 12, 2025
நேரம்: 2 மணி 45 நிமிடங்கள்
ரேட்டிங்: 3.25 / 5

இந்தியாவை அழிக்க நினைக்கிறார்கள் பக்கத்து நாட்டை சேர்ந்த ராணுவ தளபதிகள் இருவர். துருக்கியர்கள், வெள்ளையர்கள் பல நூற்றாண்டு காலம் இந்தியாவை ஆண்டபோதும் அழிக்க முடியவில்லை. அதற்கு காரணம் மக்களின் ஆழமான கடவுள் நம்பிக்கை. அதை அழித்தால் நாடு அழிந்து விடும் என வஞ்சக திட்டம் தீட்டுகிறார்கள். இந்தியாவில் உள்ள ஒரு சுயநல அரசியல்வாதி உதவியுடன், பல கோடி மக்கள் கூடும் மகா கும்பமேளாவில் கங்கையில் ஒரு வைரஸ் கலந்து மக்களை கொல்ல திட்டம் தீட்டுகிறார்கள்.

அந்த வைரசால் மக்கள் பாதிக்க்கப்படும் போது, அந்த வைரசுக்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கும் இந்திய விஞ்ஞானிகளையும் கொல்ல துரத்துகிறது வில்லன் கூட்டம். அவர்களை காப்பாற்றி, இந்தியாவையும் இரண்டு பாலகிருஷ்ணா எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது 'அகண்டா தாண்டவம்' கரு. ஒரு பாலகிருஷ்ணா அதிரடி எம் எல் ஏ, இன்னொரு பாலகிருஷ்ணா இமயமலையில் இருக்கும் முரட்டு சிவபக்தன். இவர்களுக்கும் அந்த மாற்று மருந்தை அரசிடம் சமர்பிக்க செல்லும் இளம் பெண்ணுக்கும் என்ன பந்தம் என்பதுமே கதை.

அகண்டா தாண்டவம், பக்கா பாலகிருஷ்ணா படம். அவர் ரசிகர்களுக்கான விருந்து. கஞ்சா பிஸினஸ் செய்யும் வில்லன் கும்பல்களை, பன்ச் டயலாக் பேசியபடி, அதிரடி சண்டை செய்தபடி அறிமுகம் ஆகிறார் எம் எம் ஏ பாலகிருஷ்ணா. அந்த சீன் அக்மார்க் காரசார ஆந்திரா மீல்ஸ். அடுத்து அவருக்கும், அவர் மகளுக்குமான பாச சீன் டச்சிங். மகள் ஹர்சாலி பர்த்டே பார்ட்டியில் அவர் போடுகிற ஆட்டம், அந்த பிரம்மாண்ட கலர்புல் பாடலுக்கு தியேட்டரே ஆடுகிறது. அந்த பாடலிலும் அடுத்து வரும் சில நாட்டுப்பற்று சீன்களிலும் சம்யுக்தா மேனன் கலக்குகிறார்.

இமயமலையில் தவத்தில் இருக்கும் இன்னொரு அதிரடி சிவபக்தனான பாலகிருஷ்ணா, நாட்டு மக்களை காப்பாற்றும் மாற்று மருந்தை 'காப்பாற்ற' தவ நிலை விடுத்து ஆக்ஷனில் களம் இறங்குகிறார். இமயமலை பகுதியில் அந்த பாலகிருஷ்ணா ஆடும், எதிரிகளை பந்தாடும் அந்த ருத்ர தாண்டவ சண்டை செம மாஸ். படத்தின் பிளஸ் அதுதான்.

கையில் சூலாயுதத்துடன் வில்லன்களை பந்தாடுகிற ஆக்ரோச இடைவேளை சண்டை காட்சியே கிளைமாக்ஸ் பீலீங்கை ஏற்படுத்துகிறது. அவ்வளவு எனர்ஜியுடன் அதை வடிவமைத்து இருக்கிறார்கள்.

இடைவேளைக்குபின் சிவபக்தன் பாலகிருஷ்ணாவுடன் மோதுகிறார், துஷ்ட ஆவிகளை வைத்து தவறான செயல் செய்யும் ஆதி, அவருக்கும் பாலகிருஷ்ணாவுக்குமான சண்டை வேறு ரகம். சிவபக்தர் திடீரென ஆஞ்சனேயர் பக்தர் ஆகி ஆதியை துவம்சம் செய்வது மாஸ். ராம், லக்ஷ்மன் பைட் மாஸ்டர்தான் பாதி படத்தை இயக்கி இருப்பார்கள் போல. லாஜிக் பார்க்க கூடாது, ஒன்லி மேஜிக் என்ற ரீதியில் அவை இருக்கின்றன.

சனாதன தர்மம் என்றால் என்ன? என்றும், கடவுள் நம்பிக்கை குறித்து பாலகிருஷ்ணா பேசும் டயலாக்கும் செம. படத்தின் இன்னொரு பலம் அனல் பறக்கும், ஆன்மிக நம்பிக்கை பேசும் வசனங்கள். தவறு செய்யும் உங்கள் முன்பு நான் கடவுள்னு கழுத்துல போர்டு மாட்டியபடி அவர் வரணுமா? இயற்கையை கெடுத்தது மக்கள்தான், கடவுள் யாரையும் கைவிட மாட்டார் என பேசுவது ரசிக்க வைக்கிறது.

பாலகிருஷ்ணாவின் அகண்டா தாண்டவம் தான் கதை என்பதால் படம் முழுக்க ஆக்ஷன் சீன்களுக்கே, பன்ச் டயலாக்களுக்கே, இந்து மத நம்பிக்கைகளை, பாரத கலாச்சாரத்தை உயர்த்தும் சீன்களே முக்கியத்துவமாக இருக்கிறது. இந்த வகை கொள்கை, நம்பிக்கை விரும்பாதவர்கள் படத்தை ரசிக்க முடியாது. திரைக்கதையில் பெரிய உழைப்பு இல்லை. சில சீன் நம்பும்படி இல்லை.

பாலகிருஷ்ணாவின் முரட்டு நடிப்பு, சில சேஷ்டைகளை ரசிக்காவிட்டால் படத்தை ரசிக்க முடியாது. படம் முழுக்க இப்படிதான். அதிலும் அகோரி மாதிரி இருக்கிற பாலகிருஷ்ணா ஆங்கிலம் கலந்து பன்ச் டயலாக் பேசுவது, சவால் விடுவது தனி ரகம்.

பாலகிருஷ்ணாவின் தாய் மரணமடைய, அவர் ஆசைப்பட்ட மாதிரி இறுதி சடங்கை நடத்த அந்த சிவனே வரும் சீன்களும், பக்தர்கள் குறித்து அவர் பேசும் வசனமும், அடுத்த வரும் பாடலும் தெய்வ பக்தி உள்ளவர்களை புல்லரிக்க வைக்கும்.

இமயமலை சம்பந்தப்பட்ட காட்சிகளை, சண்டைகளை அவ்வளவு நேர்த்தியாக காண்பித்து இருக்கிறது ராம்பிரசாத் கேமரா. படத்தின் வேகத்தை அதிகரிகிறது தமன் இசை. சி ஜி வொர்க் அருமை. இரண்டு பேரின் உழைப்பு அகண்டாவை கமர்சியல் சினிமா ஆக்கி இருக்கிறது. பூர்ணா டில்லி உயர் அதிகாரியாக வருகிறார். அவ்வளவு ஆளே மாறி இருக்கிறார். பாலகிருஷ்ணா மகளாக வரும் நடிப்பு ஓகே. பிரதமர், அரசியல்வாதி, வில்லன் சீன்களில் நிறைய செயற்கை தனம். ஆதிக்கு கூட ஓவர் ஆக்டிங் தான்.

படத்தில் வசனம் மாதிரி, சூலாயுதம் சம்பந்தப்பட்ட காட்சிகள், அதை கொண்டு நடத்தப்படும் சண்டை வியக்க வைக்கிறது. தமிழ் டப்பிங்கில் நிறைய தெலுங்கு வாடை. கிளைமாக்சில் கயிலாய மலைக்கு ஆபத்து வரும்போது கையில் சூலாயுதம், உடுக்கையுடன் பாலைய்யா தனி ஆளாக சண்டை போடுவதும் உங்களுக்கு தேச பாதுகாப்பு முக்கியம், எனக்கு தெய்வ பாதுகாப்பு முக்கியம் என சொல்லிக்கொண்டு, எதிரி நாட்டு ராணுவ தளபதிகளை பந்தாடுவது பாலகிருஷ்ணா படங்களில் மட்டுமே சாத்தியம்.

லாஜிக்கை மறந்து, ரசித்து பார்த்தால் அகண்டா வேறுவகை சினிமா அனுபவம். படத்தில் கொஞ்சம் செண்டிமெண்ட் இருக்கிறது. ஒரு கலர்புல் பாடல் இருக்கிறது. மற்றபடி பாலகிருஷ்ணா மயம்தான். அவ்வப்போது போரடிக்கும்போது அடுத்து மாஸ் சீன் வந்து விடுகிறது. ஆனாலும் நாட்டுபற்று, சனாதன தர்ம விளக்கம், தெய்வ பக்தி சீன்களை மாஸ் ஹீரோவான பாலகிருஷ்ணாவை வைத்து கமர்சியல், அதிரடி பாணியில் சொல்லி இருப்பதை ரசிக்கவே முடிகிறது. அதேசமயம் நீங்க வேறுவகை சினிமா ரசிகர், சீரியஸ் சினிமா காதலர் என்றால் நிறைய விமர்சனம் செய்வீர்கள்

அகண்டா 2 தாண்டவம் - உங்களுக்கு தேச பக்தி, தெய்வீக பக்தி இருந்தால் பாலகிருஷ்ணாவின் இந்த தாண்டவம் பிடிக்கும்

 

அகண்டா 2: தாண்டவம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

அகண்டா 2: தாண்டவம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓