என்னங்க சார் உங்க சட்டம்,Ennanga Sir Unga sattam

என்னங்க சார் உங்க சட்டம் - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்கம் - பிரபு ஜெயராம்
இசை - குணா பாலசுப்ரமணியன்
நடிப்பு - ஆர்எஸ் கார்த்திக், தன்யா, சௌந்தர்யா, ஐரா, சுபா
வெளியான தேதி - 29 அக்டோபர் 2021 (ஓடிடி ரிலீஸ்)
நேரம் - 2 மணி நேரம் 16 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் பல புதுப்புது இயக்குனர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் பலர் சினிமாவுக்கான இலக்கணங்களை மீறிய படங்களைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவுக்கென ஒரு மொழி, ஒரு இலக்கணம் இருக்கிறது. அதை மீறினால் நாம் அதிகம் கவனிக்கப்படுவோம் என்ற எண்ணத்தில் அப்படியான படங்களைக் கொடுக்கிறார்கள். இந்த என்னங்க சார் உங்க சட்டம் படமும் அப்படியான ஒரு படம்தான்.

இடைவேளை வரை ஒரு கதை, இடைவேளைக்குப் பிறகு வேறொரு கதை. இரண்டிற்கும் ஒன்றுக்கொன்று எந்தத் தொடர்பும் இல்லை. இடைவேளைக்கு முன்பு உள்ள படத்தில் கதை என்று எதுவும் கிடையாது, சில சம்பவங்களைத் தொகுத்து அதைப் படம் என்கிறார்கள். இடைவேளைக்குப் பிறகு சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு நடுநிலையாகச் சொல்கிறோம் என தெளிவில்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் பிரபு ஜெயராம், இன்னும் பல அரசியல் விஷங்களை முழுவதுமாகத் தெரிந்து கொண்டு படம் இயக்கினால் அவருடைய எதிர்காலத்திற்கு உதவும்.

இடைவேளை வரை உள்ள சம்பவம். நாயகன் ஆர்எஸ் கார்த்திக் வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பவர். சாதி வெறி பிடித்த அப்பாவைப் பழி வாங்க வேண்டுமென காதலித்துத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என காதலில் இறங்குகிறார். ஒரு காதல் தோல்வியடைந்தால் அடுத்து வேறு ஒரு பெண்ணைப் பார்த்து காதலிப்பார். இப்படி சில பல பெண்களை அவர் காதலித்து எப்படி காதலில் தோற்றுப் போனார் என்பதுதான் முதல் பாதி சம்பவங்களின் தொகுப்பு.

வெட்டியான ஒரு இளைஞர் என்றால் எந்த ஒரு நடிகரும் ஈஸியாக நடித்து விடுவார்கள். ஆர்எஸ் கார்த்திக்கும் அப்படியே நடித்திருக்கிறார். காதலிப்பதற்காக பெண்களிடம் வழிவதை அவ்வளவு ரசித்து செய்திருக்கிறார். அவரது காதலிகளாக தன்யா, சௌந்தர்யா, ஐரா, சுபா ஆகியோர் வந்து போகிறார்கள்.

இரண்டாவது பாதியில் இட ஒதுக்கீடு பற்றியும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது பற்றியும் விட்ட குறை தொட்ட குறையாக சொல்லியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு இளைஞர் ஆகமம் பயின்று கோயிலில் அர்ச்சகர் பணிக்கான இன்டர்வியூவிற்குச் செல்கிறார். பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு இளைஞர் அரசு அதிகாரி வேலை ஒன்றிற்குச் செல்கிறார். இவர்கள் இருவரும் அவர்களது வேலைகளில் சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் கதை.

தாழ்த்தப்பட்டவர்களோ, முன்னேறிய வகுப்பினரோ யாராக இருந்தாலும் ஏழை ஒருவருக்கு அரசு வேலை கொடுங்கள், திறமையானவருக்கு வேலை கொடுங்கள், பரம்பரை பரம்பரையாக தங்களுக்கான ஒதுக்கீட்டை அனுபவிக்காதீர்கள் என்பதை மேலோட்டமாகச் சொல்கிறார்கள்.

இரண்டாவது பாதிக் கதையில் பல புதுமுகங்கள். அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாகவே நடித்திருக்கிறார்கள். சமுதாயத்தில் நிலவும் சில ஏற்றத் தாழ்வுகள், அரசு அதிகாரிகளிடத்தில் உள்ள ஈகோ, கோயில்களில் நடக்கும் சில அரசியல் என சுட்டிக் காட்டுகிறார்கள்.

குணா பாலசுப்ரமணியன் இசையில் சீரக பிரியாணி... பாடல் ரசிக்க வைக்கிறது. வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டுத் தெரிய வேண்டும் என ஒளிப்பதிவாளர் அருண்கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், எடிட்டர் பிரகாஷ் கருணாநிதி ஆகியோர் உழைத்திருக்கிறார்கள்.

எடுத்துக் கொண்ட கரு சிறப்பானதுதான், ஆனால், கதை, திரைக்கதையாக்குவதில் தடுமாறியிருப்பது தெரிகிறது. அவற்றைச் சரி செய்திருந்தால் முக்கியமான ஒரு படமாக அமைந்திருக்கும்.

என்னங்க சார் உங்க சட்டம் - கட்டம் கட்டவில்லை...

 

என்னங்க சார் உங்க சட்டம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

என்னங்க சார் உங்க சட்டம்

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓