நடிப்பு - அபிலாஷ், லீமா மற்றும் பலர்
இயக்கம் - ஐயப்பன்
இசை - மகேந்திரன், வெங்கடேஷ்
தயாரிப்பு - மனிதம் திரைக்களம்
வெளியான தேதி - 7 டிசம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம்
ரேட்டிங் - 1/5
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக சிறிய படங்களின் வரவு அதிகமாக உள்ளது. பலருக்கு படம் ஒன்றை இயக்க வேண்டும், சினிமாவில் நடிக்க வேண்டும், தயாரிக்க வேண்டும் என ஆசைகள் உள்ளது. ஆனால், அவற்றை அவர்கள் முறையாக, சரியாகச் செய்கிறார்களா என்பதுதான் கேள்வியே.
ஆசையும், ஆர்வமும் மட்டுமே சினிமாவிற்கு போதாது, ஒரு படத்தை மக்களும் ரசிக்கும் விதத்தில் முழு தரத்தில் இல்லை என்றாலும், ரசிக்கும் தரத்திலாவது கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
இந்த 'தோனி கபடி குழு' படத்தைப் பொறுத்தவரையில் தமிழ் மண்ணின் பாரம்பரிய விளையாட்டான கபடியின் பெருமையைப் பற்றி படமெடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால், அதைக் கொடுத்த விதத்தில்தான் வெற்றிப் புள்ளிக்கு அருகில் கூட செல்ல முடியாமல் கோட்டை விட்டிருக்கிறார்கள்.
பாதூர் என்கிற தங்களது கிராமத்தில் உள்ள ஒரு தனியார் நிலத்தை தங்களது மைதானமாக நினைத்து அபிலாஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் குழு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த நிலத்தின் உரிமையாளர் பணக்கஷ்டத்தால் இடத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிடுகிறார். அதனால், அங்கு கிரிக்கெட் விளையாட முடியாமல் போகிறது. இடத்தை வாங்கியவரிடம் சென்று அபிலாஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் பேசுகிறார்கள். 3 லட்ச ரூபாய் கொடுத்தால் அவர்களுக்கே நிலத்தைக் கொடுத்து விடுவதாக நிலத்தை வாங்கியவர் சொல்லி 10 நாள் அவகாசமும் கொடுக்கிறார். அதற்குள் அவர்கள் நிலத்தை தங்களுக்கு சொந்தமாக்கினார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
கிரிக்கெட் விளையாட்டை தங்கள் உயிர் மூச்சாக நினைத்த அபிலாஷ் மற்றும் நண்பர்கள் கபடி விளையாட்டின் பக்கம் திரும்புவதற்கான காரணத்தை மட்டுமே யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஐயப்பன். 30க்கும் மேற்பட்டவர்களை இந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
படத்தின் நாயகன் அபிலாஷ். சிறு வயதில் டிவி தொடரில் நடித்தவராம். பார்த்தால் அப்படித் தெரியவில்லை. அனைத்து காட்சிகளிலும் ஒரே விதமான எக்ஸ்பிரஷனை காட்டுகிறார். படத்தின் நாயகியாக லீமா. சிறிய பட்ஜெட் படங்களில் நடிப்பதற்கென்றே இவரைப் போன்றவர்கள் இருப்பதால் தயாரிப்பாளர்கள் தப்பிக்கிறார்கள்.
படத்தில் நகைச்சுவை என்று சொல்லி பல காட்சிகளில் பொறுமையை சோதிக்கிறார்கள். அபிலாஷ் மற்றும் நண்பர்களை கபடி விளையாட வற்புறுத்தும் அந்த டீக்கடைக்காரர் மட்டுமே கொஞ்சம் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.
பாதூர் என்ற கிராமத்து லொகேஷன் கதைக்குத் தகுந்தபடி பொருத்தமாக இருக்கிறது. பல காட்சிகள் டிவி தொடரை விடவும் மோசமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படி சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பவர்கள் ஒரு சினிமாவை எடுக்கிறோம் என்ற உணர்வுடன் யோசித்து நல்ல படங்களைக் கொடுத்தால் தமிழ் சினிமாவிற்கு நல்லது.