2

விமர்சனம்

Advertisement

அறிமுகங்கள் ஆர்.எஸ்.கார்த்திக் - அஞ்சலி ராவ் ஜோடி நாயகர்-நாயகியாக நடிக்க, அஷோக்கின் எழுத்து, இயக்கத்தில்., "சோத்தாங்கையில பாத்திக் கட்டி நீ துன்னாலும் பீச்சாங்கை இல்லாட்டி நாறிப் போயிடுவ" எனும் - கொருக்குப்பேட்டை குரங்கு சித்தரின் புது வித பழமொழி டைட்டில் கார்டு முடிந்ததும் திரையில் மிளிர, ஆரம்பம் ஆகிறது, கர்ஸா என்டர்டெயின்மென்ட் வழங்க, பி.ஜி.முத்தைய்யா மற்றும் ஆர்.எஸ்.கார்த்திக் தயாரிக்க, பிக்ஸர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் வெளியிட்டிருக்கும் "பீச்சாங்கை" திரைப்படம்.

தன் கூட்டாளிகள் திருமண பத்திரிகை ஒன்றுடன், பெரியவர் ஒருவரிடம் அடித்து வந்த மூன்று லட்ச ரூபாய் பணப்பையை அந்த திருமணம் நின்று விடக்கூடாது... எனும் நல்லெண்ணத்தில் உரியவரிடம் திருப்பிக் கொடுக்கச் சென்று காதலில் விழுந்து, நல்லவனாக மாற நினைக்கும் பிக்பாக்கெட் பேர் வழியான ஹீரோவுக்கு, எதிர்பாராது விபத்தொன்றில் சிக்கியதால் அவரது பீச்சாங்கை அவரது பேச்சையே கேட்காது... எனும் விநோத வியாதி. அதிலிருந்து குணம் பெற, மருத்துவ சிகிச்சைக்காக அவருக்கு மூன்று லட்ச ரூபாய் தேவை எனும் நிலையில், அவரைத் தேடி ஒரு பிரபல ரவுடி கும்பலிடமிருந்து பெரிய ஆபர் ஒன்று வருகிறது. அதன்படி, ஒரு அரசியல் புள்ளியின் அந்தரங்க லீலை வீடியோக்கள் அடங்கிய அவரது செல்போனை அந்த அரசியல் புள்ளியிடமிருந்து அடித்து வந்தால், ஹீரோவுக்கு மூன்று லட்சம் பணம் தருகிறோம்... என்பது தான் அந்த ஆஃபர். தன் பேச்சை கேட்க மறுக்கும் தனது தடாலடி பீச்சாங்கையை வைத்துக் கொண்டு, அரசியல் புள்ளியின் செல்போனை ஹீரோ அடித்தாரா?, அவருக்கு மூன்று லட்சம் கிடைத்ததா?, கையை சரி செய்தாரா?, காதலியை கைபிடித்தாரா..? என்பதற்கு சீரியஸ் காட்சிகளிலும் சிரிப்பூட்டும் படி விடை சொல்லி, வெறுப்பேற்றியிருக்கிறது "பீச்சாங்கை" படத்தின் கதையும், களமும்.

பிக்பாக்கெட் பேர்வழியாக தன் பேச்சு கேட்காத பீச்சாங்கையை உடைய கதையின் நாயகராக எஸ்.முத்து எனும் ஸுமுத்தாக ஆர்.எஸ்.கார்த்திக், அறிமுக நாயகர் எனும் குறை தெரியாத அளவிற்கு எக்கச்சக்கமாக இயல்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். அவரைக் காட்டிலும் அதிகம் அவரது பீச்சாங்கை நடித்திருப்பது இப்படடைட்டிலுக்கு சாலப் பொருத்தம்.

"இந்த கை இல்லன்னா என்னன்னா? இன்னொரு கையும் நம்பிக்கையும் இருக்குல்ல...", "அரசியல்வாதி கிட்டக்க கை வைக்கறதும் டிரான்ஸ்பார்மர்ல கை வைக்கறதும் ஒண்ணுனா..." என்றபடி கதைக்கேற்ற "பன்ச்"களை கதாநாயகர் கார்த்திக் பேசும் விதமும் பதம் என்பது ஆறுதல்.

எஸ்.டி.டி., பூத் அபிராமியாக நாயகி அஞ்சலி ராவ், ஹோம்லி லுக்கில் ஒரு மாதிரி நாயகரை மட்டுமின்றி நம்மையும் வசீகரிக்கிறார்.

குஜக கட்சித் தலைவர் தமிழ்மகனாக எம்.எஸ்.பாஸ்கர், அதே கட்சியின் சபலக் கேஸ் அரசியல் புள்ளி நல்லதம்பியாக விவேக் பிரசன்னா, உத்தமன் - கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், கோவைகஜா - பொன்முடி, கிரிஷ் - கிரிஷ்கரன், ஜோசப் - ஜித்தேந்தர், ஆண்ட்ரூ ஜெயபால் - மொள்ளமாரி, நாயகன் ஆரம்ப காட்சி கூட்டாளிகள் ரவி - அருண், ரீட்டா - கருதி மேனன் உள்ளிட்டோர் பீச்சாங்கை படத்திற்கு தங்கள் யதார்த்த நடிப்பின் மூலம் சோத்தாங்கையாக தோள் கொடுத்திருக்கின்றனர்.

ஜோமின் மேத்யூவின் படத்தொகுப்பு, பலே தொகுப்பும் அல்ல... படாவதி தொகுப்பும் அல்ல... என்பதும், கெளதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு, ஒகே.பதிவு என்பதும் ஆறுதல்.

பாலமுரளி பாலுவின் இசையில் "பீச்சாங்கை..." , "டாம் & ஜெர்ரி...", "ஸுமூத்து என் பேரு டா..." "லவ்வு சாங்குக்கு சிட்சுவேஷன் வந்ததே..." உள்ளிட்ட பாடல்கள் இசையும் பின்னணி இசையும் பெரிய குறையுமில்லை, நிறையுமில்லை!

அஷோக்கின் எழுத்து, இயக்கத்தில், "தலைவர் தமிழ்மகன் வீடியோவும் இருக்கு... அவரு ஏகபத்தினி விரதனா? ஏகப்பட்ட பத்தினி விரதனான் இனிமேதான் தெரியும்", தமிழ் மீது ஆணையா, இங்லீஷ் மீது பூனையான்னு டயலாக் அடிக்காதே, என்பது உள்ளிட்ட காமெடி "பன்ச் "வசனங்களுக்காகவும், "ஏலியன் ஹேண்ட் சென்ட்ரோம்" எனும் பெயரில் தமிழ் சினிமாவை தாக்கியிருக்கும் புது வித வியாதிக்காகவும் "பீச்சாங்கை"-க்கு "சோத்தாங்கை"யால் ஒருமுறை டிக்கெட் எடுத்து பார்க்கலாம். ரசிக்கலாம்!

அதேநேரம், ஹீரோ ஆர்.எஸ்.கார்த்திக், தன் கூட்டாளிகள் ரவியையும், ரீட்டாவையும் நாயகியின் மூன்று லட்சம் பணத்தை திருப்பி கொடுத்ததால் ஆரம்ப காட்சியிலேயே பிரிந்து விடுகிறார். அதன்பின் அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாத இவரை, க்ளைமாக்ஸில் அவர்கள் காட்டிக் கொடுத்ததால் தான் சிக்கியதாக போலீஸ் சொல்வதும், அந்தரங்க லீலைகள் அடங்கிய செல்போனை அடிக்க சொல்லும் அரசியல் புள்ளி உத்தமனும் சரி, அதை மீட்க சொல்லும் நல்ல தம்பியும் சரி.... எல்லோரும் கோவை கஜாவையே நாடுவதும்... உள்ளிட்ட லாஜிக் மிஸ்டேக்குகளும் விழுந்து, விழுந்து சிரிக்க வேண்டிய காட்சிகள் கூட, வார்த்தைகளிலும், காட்சிப்படுத்தல்களிலும் படுவிரசமாக படமாக்கப்பட்டிருக்கும் விதமும் பீச்சாங்கையை பீச்சாங்கையாகவே காட்டுவது பெரும் பலவீனம்!

ஆகமொத்தத்தில், "பீச்சாங்கை - பெருங்கை-யும் அல்ல... வெறுங்கையும் அல்ல!"

 

பட குழுவினர்

பீச்சாங்கை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓