விமர்சனம்
கதாநாயகராக, கிருஷ்ணாவாக ஜெய், வழக்கம் போலவே தொண்டை கமற கமற பேசி ரசிகனின் நெஞ்சை கவர முயற்சித்து பாதி வெற்றியும் பெற்றிடுகிறார். தற்கொலை முடிவுடன் சரக்கில் விஷம் கலந்து அதை சாப்பிடாமல் சேரனின் ஆட்டோகிராப் பாடலை பார்த்து விட்டும் பிரேம்ஜியின் குத்தாட்டத்திற்கு ஆட்டம் போட்டும் அவர் பண்ணும் அலப்பறைகளும், சைக்காடிஸ்ட் தம்பி ராமைய்யாவை தன் காதலுக்காக அவர், அர்த்த ராத்திரி என்றும் பாராமல் படுத்தும்பாடுகளும் அசத்தல்.
திவ்யாவாக பிரணிதா, ரொம்ப நாளைக்கு அப்புறம் ஹோம்லி கிளாமர் விரும்பும் ரசிகர்களை செமயாய் குஷிப்படுத்தியிருக்கிறார்.
ஜெய்யின் நெருங்கிய நண்பர்கள் ரமேஷாக கருணாகரன், மைதீன் பாஷாவாக காளி வெங்கட், சவுமி நாராயணனாக நவீன், இவர்களுக்கு சரிக்கு சமமாக சைக்காடிஸ்ட் முத்து வினாயகமாக தம்பி ராமைய்யா நால்வரும் காதல் தோல்வி, தற்கொலை முயற்சி... எனும் சோகமயமான கதையை தங்களது அதிரி புதிரி காமெடிகளால் அசத்தலாக தூக்கி நிறுத்துகின்றனர்.
இவர்களை மாதிரியே பின்பாதியில் கருப்பு ராக்காக வரும் நான் கடவுள் ராஜேந்திரனும் கலக்கல். எதிரும் புதிரும் டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளராக வரும் படவா கோபி, அதில் அதிரி புதிரியாய் கெஸ்ட் ரோலில் பங்கேற்கும் சந்தானம் உள்ளிட்ட எல்லோரும் கல கலப்பு!
கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு , முன் பாதி பக்கா தொகுப்பு, பின் பாதி பரவாயில்லாத தொகுப்பு.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும், ஒவியம் காவியம் இல்லை என்றாலும், படத்தில் அழகு ராஜ்ஜியம் செய்திருக்கின்றன.
சந்தோஷ் தயாநிதி இசையில் ஒன்றோடு தான் ஒன்றாக வாழும்..., கண்ணாடி பூவுக்கு வண்ணமில்லை.., மண்ணெண்ண, வேப்பெண்ண, விளக்கெண்ண, கைய ஒடிச்சி, கல் ஒடிச்சி... உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் பிரமாதம் .
மகேந்திரன் ராஜாமணியின் எழுத்து, இயக்கத்தில் ஐ.டி கம்பெனியில் ஐ.டி என்பதற்கான இன்டீரியர் டேமேஜ்... எனும் விளக்கம், சம்பாத்தியத்தில் கை வச்சிருந்தாக்கூட பரவாயில்ல.... தாம்பத்ய்த்துல கை வச்சிட்டானே... எனும் ரைமிங், டைமிங் புலம்பல், சேரன், பிரேம்ஜி பாடல்கள் மூலமான கலாய்ப்பு உள்ளிட்ட எல்லாம் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தை, எல்லோருக்கும் பிடிக்கும் காமெடிகள் நிறைந்த படமாக காட்ட முயற்சித்திருக்கிறது.
மொத்தத்தில், ரசிகனுக்கு பிடித்த காதல் - காமெடிகள் நிரம்பிய திரைப்படமே எனக்கு வாய்த்த அடிமைகள்!















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!