விமர்சனம்
--------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
மத்திய மந்திரி, தன் துணைவியைக் கொல்லும் வீடியோ ஒரு டி.வி. கம்பெனி அதிபரின் கைக்குக் கிடைக்கிறது. மந்திரியின் ஆட்கள், அந்த வீடியோவைக் கைப்பற்ற அதிபரின் மகளைத் துப்பாக்கி முனையில் கடத்துகிறார்கள். அவளை நாயகன் தன் கையை மட்டுமே நம்பி மீட்பதுதான் கதை! இயக்கம் ஆனந்த சங்கர். (கோமல் சுவாமிநாதனின் பேரன்!)
விக்ரம் பிரபு ஆக்ஷனில் அதிரடி. குரலும் பரம்பரை ரத்தத்தில் பொருந்திப் போகிறது. காதலில் கொஞ்சம் சொதப்பினாலும், திரைக்கதை அவரது தோளில் கை போட்டு, ஓட்டம், ஓட்டம் என்று ஓட வைத்திருக்கிறது.
ப்ரியா ஆனந்த் வெறும் கவர்ச்சிப் பாவையாக மட்டும் இல்லாமல் நடிக்கவும் வரும் என்று காட்டியிருக்கிறார். எல்லாம் இழந்தபின் காரில் பொங்கி அழும் காட்சி ஒரு சோறு பதம்!
பட்டையைக் கிளப்புகிறார் பட்டாபி! அதிகாரியை அடித்து சாய்க்கும் காட்சி பலே. சக்ரவர்த்தியும் நைஸ்.
சிவமணியின் இசை அவரது டிரம்ஸ் போலவே காதைக் கிழிக்கிறது. ராஜசேகரின் காமிராவும், முத்துராஜின் கலையும் சேர்ந்து, பாடல் காட்சியை 3டி அளவுக்கு உயர்த்துகிறது.
வில்லன், துப்பாக்கியை காரில் வைத்துவிட்டு, கதவுக் கண்ணாடியை ஏற்றாமல் போவது, போலீஸ் பட்டாளமே தேடிக் கொண்டிருக்கும்போது நாயகனும், நாயகியும் கிரெடிட் கார்டு, மால் என்று அங்கேயே சுற்றுவது, அத்தனை பெரிய ரகசிய வீடியோவை ஒரு காப்பி கூட வைத்தக் கொள்ளாமல் சும்மா இருப்பது என்று பெரிய பெரிய ஓட்டைகள் படம் முழுக்கப் பரவிக் கிடக்கின்றன.
அரிமா நம்பி - தமிழ்ப் பெயரில் ஓர் ஆங்கிலப் படம்!
--------------------------------------------------------------
கல்கி விமர்சனம்
தவறு செய்பவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சாமான்ய மனிதனும் தட்டிக் கேட்கும் அளவுக்கு இன்றைய டெக்னாலஜி வளர்ந்துள்ளது என்பதைச் சொல்லும் படம் அரிமா நம்பி.
விக்ரம் பிரபு கோவையில் இருந்து சென்னை வந்து கார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். ஒரு ஹோட்டலில் ப்ரியா ஆனந்தைச் சந்திக்கிறார். அனாமிகா என்ற அவரும் விக்ரம் பிரபுவும் செல்போன் எண்களைப் பரிமாற, அடுத்த நாள் இருவரும் டின்னரில் தனிமையில் மது அருந்த... இரவு 12 மணிக்கு பார் மூட, போதை பத்தாமல் ப்ரியா ஆனந்தின் வீட்டுக்கு வருகிறார்கள். அங்கும் இருவரும் மது அருந்த. அப்போது ப்ரியா ஆனந்த் ரவுடிகள் இருவரால் கடத்தப்படுகிறார். இப்படி ஆரம்பக் காட்சி பரபரப்பு... அதன்பின் அவர் சேனல் 24 எம்.டி. மகள், சேனல் உரிமையாளர் எம்.பி. ஒருவரின் காதலி கொலை செய்யப்படுவதை சேனலில் ஒளிபரப்பக்கூடாது என்பதற்காக ப்ரியா ஆனந்த் கடத்தப்படுகிறார் என்ற மாமூல் கதையில் பயணிக்கிறது.
சக்திவாய்ந்த எம்.பியிடமிருந்து விக்ரம் பிரபு - ப்ரியா ஆனந்த் எப்படித் தப்பினார்கள் என்பதைத் திரைக்கதையில் பரபரப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த் சங்கர்.
ஆர்.டி. ராஜசேகரின் கேமரா ராயபுரம் பகுதிகளில் சந்து, பொந்துகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. ஆக்ஷன் படத்துக்கு ஏற்ற ஒளிப்பதிவு. டிரம்ஸ் சிவமணி முதன்முதலாகத் திரைப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். வெல்டன் சிவமணி, அருவிக்கரையோர பாடல் மனதை அள்ளுகிறது.
க்ளைமாக்ஸ் காட்சியில் மேராவின் மூலம் வில்லனைப் பொறி வைப்பது, நம்பி வந்த அனாமிகாவை கரைசேர்க்க விக்ரம் பிரபு போராடுவது, நண்பன் அண்ட் கோவின் மூலம் பணம் கிடைக்கும்போது நமக்கெதுக்கு வம்பு! வா ஓடிப் போகலாம் என்று அவர் காட்டும் அக்கறை என விக்ரம் பிரபு ஸ்கோர் செய்துள்ளார். இயக்குநருக்கேற்ற நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் விக்ரம் பிரபு. கோபம் வரும்போது அவர் அப்பா பிரபுவின் சாயல் ஆங்காங்கே பளிச்சிடுகிறது. ப்ரியா ஆனந்த் பயம், தவிப்பு, ரொமான்ஸ் என கலந்து கட்டிக் கலக்கியுள்ளார்.
செட் எது, ரியல் எது எனத் தெரியாத அளவுக்கு கலை இயக்குநர் டி. முத்துராஜ் பிரமிக்க வைத்துள்ளார். படத் தொகுப்பாளர் யுவன் சீனிவாசன் படத்தின் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் - திலீப் சுப்பராயர் ஜே போட வைக்கிறார்.
படத்தின் லாஜிக் மீறல் அதிகம். வடபழனி விஜயமாலுக்குள் இருக்கும் விக்ரம் பிரபுவை போலீஸ் படை மடக்கத் திட்டமிட்டுத் தோல்வியைத் தழுவுவது பூச்சுற்றல்.
வில்லன் தனது காதலி நடிகையைக் கொலை செய்யும் காட்சியை யார் ஒளிப்பதிவு செய்தது? எப்படி அது நடந்தது? என்பதை விளக்காதது மைனஸ். படத்தின் உயிர் நாடியே அந்தக் காட்சிதான். அதைத் தெளிவு படுத்தாமல் விட்டது ஏன்?
அரிமா நம்பி - கொஞ்சம் நம்பலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!