Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கோடை விடுமுறை படங்கள் - ஓர் பார்வை

02 மே, 2019 - 10:19 IST
எழுத்தின் அளவு:
Tamil-Cinema-2019-Summer-Films

2019ம் ஆண்டு கோடை விடுமுறை இன்னும் ஆரவாரமாக நகரவில்லை. அதற்குக் காரணம் 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்'. இந்த ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்து பயந்து நமது தமிழ்ப் படங்கள் சில பின்வாங்கிவிட்டன. இருப்பினும் அந்த சூப்பர் ஹீரோக்களையும் மீறி 'காஞ்சனா 3' பேய் வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பது ஆச்சரியம்தான்.

தமிழ்ப் புத்தாண்டிலேயே ஆரம்பமாகும் கோடை விடுமுறை இந்த ஆண்டில் 'காஞ்சனா 3' என்ற ஒரே ஒரு படத்துடன்தான் தனது கொண்டாட்டத்தை ஆரம்பித்தது. அந்தப் படத்திற்குப் போட்டியாக ஏன் வீணாக களமிறங்க வேண்டும் என்றும் சில படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டதும் நடந்தது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் உண்மையில் இன்று மே 1 தான் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. இந்த மாதத்தில் கோடை விடுமுறைக்காக வெளிவரும் சில முக்கிய படங்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

தேவராட்டம்

தொடர்ந்து சாதிப் படங்களை மட்டுமே எடுத்து வரும் முத்தையா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம். கூடவே, அக்கா, தம்பி மற்றும் கூட்டுக் குடும்பத்தின் பாசத்தையும் மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சாதிய அழுத்தங்களை மீறி உறவின் வலிமை வெற்றி பெறுகிறதா என்று பார்க்க வேண்டும்.

கே 13

அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் மே 3ம் தேதி வெளிவர உள்ள படம். இது ஒரு த்ரில்லர் படம். த்ரில்லர் படங்களை விறுவிறுப்புடன் கொடுத்தால் ரசிக்கலாம். த்ரில்லர் படம் என்றாலே ஹாலிவுட், கொரியன் படங்களிலிருந்து காப்பி என்று நமது ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். இது சுட்ட படமா, சுடாத படமா என்பது இரண்டு நாட்களில் தெரிந்துவிடும். அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

100

'டார்லிங்' படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் படம். தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்துக் கொண்டிருக்கும் அதர்வாவிற்கு இந்தப் படமாவது திருப்புமுனையாக அமையட்டும். தன் முந்தைய இரண்டு படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இந்தப் படத்தை ஒரு க்ரைம் திரில்லாராக கொடுத்திருப்பதாகச் சொல்கிறார் இயக்குனர். அதர்வா ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். க்ரைம் திரில்லருக்கும், போலீஸ் கதைக்கும் பொருத்தமான 100 என்ற டைட்டிலை தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் வைக்காமல் போனது ஆச்சரியம்தான்.

நீயா 2

ஜெய், லட்சுமி ராய், கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்க சுரேஷ் இயக்கியிருக்கும் படம். ஒரே படத்தில் மூன்று கிளாமர் நாயகிகள் நடித்திருப்பது ஆச்சரியம்தான். 40 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'நீயா'. அந்தப் படத்திற்கும் இந்தப் படத்திற்கும் சம்பந்தமில்லை. பாம்பு என்பது மட்டும்தான் தொடர்பு. பாம்பு படமெடுத்து இந்தப் படத்தைப் பார்க்க வைப்பார்களா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

கீ

எப்போதோ வந்திருக்க வேண்டிய படம். தயாரிப்பாளரின் நிதிச் சிக்கலால் தொடர்ந்து தள்ளிக் கொண்டே வந்திருக்கிறது. அடுத்த வாரம் மே 10ம் தேதி வெளிவரும் என்று அறிவித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், ஹேக்கிங் என இந்தக் காலத்திய படம். அதனால் ரசிக்க வைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.

கொலைகாரன்

ஆன்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம். ஒரு க்ரைம் திரில்லர் படம் என்பதை படத்தின் தலைப்பைப் பார்த்ததும் தெரிந்து கொள்ளலாம். விஜய் ஆண்டனி நடித்து இதற்கு முன் வெளிவந்த சில படங்கள் சரியாக ஓடவில்லை. அந்தக் குறையை இந்தப் படம் போக்கிவிடும் என விஜய் ஆண்டனி நம்புகிறார். படத்தின் இயக்குனர் அவருடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர் என்பதால் அந்த நம்பிக்கை அதிகமாகவே இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

மிஸ்டர் லோக்கல்

நகைச்சவைப் படங்களின் ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இணைந்திருக்கும் படம் இது. தமிழின் நம்பர் 1 நடிகை நயன்தாரா மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். ரஜினிகாந்த், விஜயசாந்தி நடித்த 'மன்னன்' படத்தின் உல்டாதான் இந்தப் படம் என்கிறார்கள். அட்லீ வரிசையில் தன்னை இணைத்துக் கொள்ள ராஜேஷ் ஆசைப்படுகிறார் போலிருக்கிறது. அவருக்கும் இப்போது ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அது சிவகார்த்திகேயன் மூலம் கிடைத்தால் மகிழ்ச்சிதான்.

சிந்துபாத்

இயக்குனர் அருண்குமார், விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இதற்கு முன்பும் 'சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும்' என ரசிக்கும்படியான படங்களைக் கொடுத்ததால் இந்தப் படத்தையும் அதுபோலவே எதிர்பார்க்கலாம். விஜய் சேதுபதி ஜோடியாக 'இறைவி' படத்திற்குப் பிறகு மீண்டும் அஞ்சலி. படம் பற்றி இன்னும் பெரிதாக வெளியில் தெரியவில்லை.

அயோக்யா

தெலுங்கில் வெளிவந்த 'டெம்பர்' படத்தின் தமிழ் ரீமேக்தான் 'அயோக்யா'. ஹிந்தியில் 'சிம்பா' என ரீமேக்காகி பெரிய வெற்றியைப் பெற்றது. அறிமுக இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்கும் படம் இது. படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

என்ஜிகே

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடிக்கும் படம். சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள். படத்தின் டிரைலரைப் பார்த்ததும் இது ஒரு அரசியல் படம் என கணிக்க முடிகிறது. செல்வராகவன் படம் என்றாலே ஒரு ஸ்டைல் இருக்கும். 6 வருடங்கள் கழித்து செல்வராகவன் இயக்கி வெளிவர இருக்கும் படம். மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க ஆசை என சூர்யாவே சொல்லியிருப்பதால் இந்தப் படம் எப்படி வந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த மே மாதத்தில் 5 வெள்ளிக்கிழமைகள் வர இருக்கின்றன. சராசரியாக வாரத்திற்கு நான்கு படங்கள் என்று வைத்துக் கொண்டாலும் சுமார் 20 படங்கள் வெளிவர வாய்ப்புள்ளது. சென்சார், தியேட்டர், வியாபாரம், போட்டி என ஏதாவது பிரச்சினைகள் வந்தால் படங்களின் வெளியீட்டில் சில மாற்றங்கள் இருக்கலாம்.

இருந்தாலும் இந்த கோடை விடுமுறையில் சில முக்கியமான படங்கள் சிறந்த படங்களாகவும் அமையும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. 2019ல் இதுவரையில் நான்கைந்து படங்கள் மட்டும்தான் அனைவருக்கும் லாபம் தந்த படங்கள் என்று பெயர் பெற்றிருக்கிறது. அதை இந்த மே மாதம் மாற்றும் என நம்பலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் எனும் தனி ஒருவன் : பிறந்தநாள் ஸ்பெஷல்அஜித் எனும் தனி ஒருவன் : பிறந்தநாள் ... 36 வயது, 60 படங்கள் : த்ரிஷாவின் அழகிய சாதனை : பிறந்தநாள் ஸ்பெஷல்! 36 வயது, 60 படங்கள் : த்ரிஷாவின் அழகிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in