சிம்ரன்
தனது நடிப்பாலும், ஆட்டத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இடுப்பழகி சிம்ரன். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த சிம்ரன், 1976ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் ரிஷிபாலா நாவல். மாடலிங் துறையில் இருந்த சிம்ரன், சனம் ஹர்ஜெய் என்ற இந்தி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்தவர், பிறகு தென்னிந்திய படங்களிலும் பிரபலமானார். விஐபி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சிம்ரன், கமல், அஜித், விஜய், பிரஷாந்த்... என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனது எடுப்பான இடுப்பாலும், நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களை கவர்ந்த சிம்ரன் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்தார்.
2003ம் ஆண்டு தனது பால்யகாலத்து நண்பரான தீபக்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்து கொண்ட சிம்ரன், டெலிவிஷன்களில் நடிக்க தொடங்கினார். ஆனாலும் அவ்வப்போது தனக்கு பிடித்த கதாபாத்திரம் அமைந்தால் சினிமாவிலும் நடித்து வருகிறார் சிம்ரன். தற்போது புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் துவக்கியுள்ளார். விரைவில் இயக்குநராகவும் அவதரிக்க உள்ளார்.