Advertisement

சரோஜா தேவி

Birthday
07 Jan 1938 (Age )

கருப்பு வெள்ளை சினிமா கலர் சினிமாவாக மாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருந்தவர் கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி. பெங்களூரைச் சேர்ந்த பணக்கார வீட்டு பெண் சரோஜாதேவி. கான்வெண்டில்தான் படித்தார். அப்பா பெரிய போலீஸ் அதிகாரி. சரோஜாதேவி நன்றாக பாடுவார். அவரை நல்ல பாடகியாக்க வேண்டும் என்றதான் அவர் தந்தை விரும்பினார். கன்னட நடிகரான ஹொன்னப்ப பாகவதர் முன் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் சரோஜாதேவி பாடினார். எல்லோரும் அவர் பாட்டை ரசித்துக் கொண்டிருக்க பாகவதர் சரோஜாதேவியின் அழகையும், அவரது முகபாவங்களையும் கவனித்தார். இவர் பாடகியாக வேண்டியவர் அல்ல நடிகையாக வேண்டியவர் என்பதை கணித்தார். சரோஜாவின் அப்பாவிடம் "என் படத்தில் உங்கள் மகளை ஹீரோயினாக நடிக்க வைக்கிறேன். அவள் பெரிய இடத்துக்கு வருவாள்" என்றார். ஆனால் சரோஜாதேவின் தந்தைக்கு மகள் நடிகையாவதில் விருப்பம் இல்லை. தொடர்ந்து பாகவதர் வற்புறுத்தலாலும், கவி காளிதாஸ் படத்தின் கதை கன்னியமானது என்பதாலும் "இந்த ஒரு படத்தில்தான் நடிப்பாள்" என்ற நிபந்தனையோடு நடிக்க சம்மதித்தார். 1955ம் ஆண்டு வெளிவந்த கவி காளிதாஸ் கன்னடப்படம் அதிரிபுதிரி ஹிட். கன்னட ரசிகர்கள் சரோஜாதேவியை கொண்டாடினார்கள். தொடர்ந்து தமிழில், இல்லறமே நல்லறம் படத்தில் ஒரு நாட்டியக்காரி வேடத்தில் அறிமுகமானார். யார் இந்தப் பெண் இத்தனை அழகாக இருக்கிறாளே என்று எல்லோரும் கவனித்தார்கள். அப்படி கவனித்தவர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர். அவர் தனது சொந்த படமான நாடோடி மன்னன் படத்தில் இரண்டாம் பகுதியில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். அதுதான் சரோஜாதேவியை தமிழ்நாட்டுக்கே அடையாளம் காட்டியது. தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என அந்தக்கால ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்த சரோஜாதேவி, இதுவரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூஷன், வாழ்நாள் சாதனையாளர் என பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.