மலையாளத்து வரவு நடிகை அமலாபால். கேரள மாநிலம் எர்ணாகுளம், அலுவாவில், 1991-ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி பிறந்தவர் நடிகை அமலாபால். மாடலிங் துறையில் இருந்தவரை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் மலையாள இயக்குநர் லால் ஜோஸ். தான் இயக்கிய நீலத்தாமரா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார். அடுத்தபடியாக தமிழில் வீரசேகரன் எனும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பாக சாமியின் சிந்து சமவௌி படம் வௌிவந்துவிட்டது. இப்படத்தில் அமலாபாலின் நடிப்பு விமர்சிக்கப்பட்டாலும், அடுத்து அவர் நடித்த மைனா படம் அவரை எங்கேயோ கொண்டு போய் சென்றது.
ஒரே படத்தில் டாப்பிற்கு சென்ற அமலாபால், தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து டாப் நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து பிரபலமான அமலா, டாப்பில் இருக்கும்போதே இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பை குறைத்து கொண்டாலும் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.