நடிகை, பரதநாட்டிய கலைஞர், அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களைக் கொண்ட நடிகை ஹேமா மாலினி, தமிழகத்தின் ஒரத்தநாடு அருகே உள்ள அம்மன்குடியைச் சேர்ந்தவர். 1960ம் ஆண்டு தமிழில் இது சத்தியம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். 1965ம் ஆண்டு வெண்ணிறாடை படத்தில் முதலில் இவரது பெயர் தான் பரிந்துரைக்கப்பட்டது. அப்போது அவருக்கு 15 வயதே ஆனதால் இயக்குனர் ஸ்ரீதர் இவரை நிராகரித்து விட்டு, ஜெயலலிதாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார்.பின்னர் தெலுங்கில் சில படங்களில் நடித்த ஹேமா மாலினிக்கு பாலிவுட்டில் தொடர்ந்து வாய்ப்புக்கள் வந்ததால், இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்ததுடன் பாலிவுட்டின் கனவுக்கன்னியாகவும் வலம் வந்தார். 1970ம் ஆண்டு வெளிவந்த ஜானி மேரா நாள் படம் இவருக்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. தனது 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 150க்கும் மேற்பட்ட நடித்துள்ள ஹேமா மாலினி, 2003ம் ஆண்டு அரசியலில் நுழைந்து ராஜ்யசபா எம்.பி.,யாகவும் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை 11 முறை வென்றுள்ள இவர், 2000ம் ஆண்டு பிலிம்பேரின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். மேலும், பத்மஸ்ரீ, கவுரவ டாக்டர் பட்டம், சாமாபா விதஸ்தா விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.