தமிழ் சினிமாவில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நடிகர் நாசர். எப்படிப்பட்ட வேடம் என்றாலும் அதை அசால்ட்டாக நடித்துவிட்டு போகும் திறமை வாய்ந்தவர். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் நாசர். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே ஒரு சிறிய ஊரில் பிறந்த நடிகர் நாசர், தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு நாடகங்களில் நடிக்க தொடங்கினார். பிறகு இயக்குநர் கே.பாலசந்தரின், கல்யாண அகதிகள் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினார். தொடர்ந்து எஸ்.பி.முத்துராமன் இயக்கிய வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்த நாசர் படிப்படியாக பல படங்களில் நடித்து பெயர் சொல்லும் நடிகரானார். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எந்த ரோல் கொடுத்தாலும் நடிக்கும் ஆற்றல் பெற்ற நாசர், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். நாசர், கமீலா என்பவவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். நாசரின் தயாரிப்பு நிறுவனத்தை கமீலா தான் கவனித்து வருகிறார்.