
தனுஷூக்கு கஸ்தூரி ராஜா சொன்ன அட்வைஸ்
நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ், "லவ் ஓ லவ்" எனும் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். நாயகியாக நாக துர்கா அறிமுகமாகிறார். ஜூலை 10ல் ரிலீசாகிறது. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் கஸ்தூரி ராஜா கலந்து கொண்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் கஸ்தூரி ராஜா கூறியதாவது: பவிஷை உருவாக்கியவர் தனுஷ். தனுஷின் வார்ப்பு தான் பவிஷ். நான் தனுஷை அறிமுகப்படுத்தினேன், அந்தப் படம் ஹிட்டானது. அவரை வைத்து "ட்ரீம்ஸ்" என்ற படத்தை இயக்கினேன். ஏனென்றால் அறிமுகப்படுத்துவது மட்டும், வாய்ப்பு தருவது மட்டும் போதாது; தன்னை தானே வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்தப் படத்தை முடித்த பின் தனுஷுக்கு நான் ஒரே ஒரு அட்வைஸ் தான் கூறினேன். உன் இயக்குனரோ, தயாரிப்பாளரோ ஷாட் எடுக்கிறார்களோ இல்லையோ, அவர்கள் சொன்ன நேரத்துக்கு நீ சென்றுவிடு என்றேன். அதை இன்றுவரை தனுஷ் பின்பற்றுகிறார்.
என் முதல் மகன் செல்வராகவன், முதல் பேரன் பவிஷ். இந்தப் படத்துக்காக பவிஷ் கடினமாக உழைத்திருக்கிறார். தனுஷும் அப்படி உழைத்தவர்தான். "துள்ளுவதோ இளமை" முடிந்ததும், "காதல் கொண்டேன்" படத்துக்காக செல்வராகவனிடம் தனுஷை ஒப்படைத்தோம். பின்னர் அந்த பொறுப்பை சுப்ரமணியம் சிவா எடுத்துக் கொண்டார். தனுஷை ஹீரோவாக வடிவமைத்ததே அவர் தான். அவரும் தன்னை வளர்த்து கொண்டார். நீயும் (பவிஷ்) அப்படி உன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!