முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்ற பன்முகத் தன்மையோடு, 1950 மற்றும் 60களில் தென்னிந்தியத் திரையுலகின் தனிப்பெரும் அடையாளமாக, சமூக, புராண, இதிகாச மற்றும் தேசப்பற்று மிக்க பல தரமான கலைப்படைப்புகளைத் தந்து, தமிழ் திரையுலகிற்கு பெரும் பங்காற்றிய திரைக் கலைஞராக பார்க்கப்படுபவர்தான் தேசப்பற்றாளர் இயக்குநர் பி ஆர் பந்துலு.
அதே போல் 1950களில் “கன்னியின் காதலி” என்ற திரைப்படத்தின் வாயிலாக ஒரு திரையிசைக் கவிஞராக அடையாளம் காட்டப்பட்டு, கலைத்துறையில் கால் நூற்றாண்டுக்கும் மேல் ஒரு கவிஞராக, கதை வசனகர்த்தாவாக, தயாரிப்பாளராக, நடிகராக, எழுத்தாளராக என பன்முகத் தன்மையோடு பயணித்து, கவியரசராகவே வாழ்ந்து மறைந்தவர்தான் கவிஞர் கண்ணதாசன். இந்த இருவரும் 1950களின் இறுதியில், ஒரே காலகட்டத்தில், ஒரே மாதிரியான வரலாற்றுப் பின்னணி கொண்ட கதைகளைக் கையிலெடுத்து, திரைப்படங்களாக தயாரித்து வெளியிட்டனர்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து, போரிட்டு, பின் தூக்கிலிடப்பட்டு வீரமரணம் எய்திய வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாற்றை இயக்குநர் பி ஆர் பந்துலுவும், அதே ஆங்கிலேயர்களை எதிர்த்து, போரிட்டு, பின் தூக்கிலிடப்பட்டு வீரமரணம் எய்திய மருது சகோதரர்களின் வரலாற்றுப் பின்னணியை கவியரசர் கண்ணதாசனும் கையிலெடுத்து, அவரவர் தனித்துவத்தோடு, தயாரித்து திரைக்காவியங்களாகத் தந்திருந்தனர்.
இதில் “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படத்தை இயக்குநர் பி ஆர் பந்துலு தனது “பத்மினி பிக்சர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், நடிகர் திலகம் சிவாஜிகணேசனை நாயகனாக வைத்து, வண்ணத் திரைப்படமாக பெரும் பொருட் செலவில் தயாரித்திருந்ததோடு, படத்தை இயக்கியுமிருந்தார். அதேபோல் “சிவகெங்கைச் சீமை” திரைப்படத்திற்கு ஒரு தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி, படத்திற்கான திரைக்கதை வசனத்தையும், பாடல்களையும் எழுதி சிறப்பித்திருந்தார் கவியரசர் கண்ணதாசன்.
சிவாஜிகணேசன் நடித்த “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படத்திற்குப் போட்டியாக, அது வெளிவந்த அதே நேரத்திலேயே “சிவகெங்கைச் சீமை” திரைப்படத்தையும் வெளியிட்டிருந்தார் கவிஞர் கண்ணதாசன்.
கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட பின், பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துறை, சில காலங்களுக்குப் பின், சிறையிலிருந்து தப்பி வந்து, மருது சகோதரர்களிடம் அடைக்கலம் புக, நட்பின் காரணமாக ஊமைத்துறைக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்தால் மருது சகோதரர்கள் மீது ஆங்கிலேயர்கள் தாக்குதல் நடத்தியதோடு, சிவகங்கைச் சீமையையும் கைப்பற்றி, அவர்களையும் தூக்கிலேற்றி கொல்கின்றனர்.
இப்படி ஒரே கதைக் களத்தில் பயணித்த இவ்விரு திரைப்படங்களில் கலர் திரைப்படமாக வெளிவந்த “வீரபாண்டிய கட்டபொம்மன்” வெற்றி பெற, கருப்பு வெள்ளையில் வெளிவந்த “சிவகெங்கைச் சீமை” வசூலில் தோல்வியை சந்தித்தது. அன்று வசூல் ரீதியாக அது தோல்வியை சந்தித்திருந்தாலும், மருது பாண்டியர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்திராத எண்ணற்றோருக்கு ஒரு ஆவணமாகவும், போற்றுதலுக்குரிய ஒரு ஒளி ஓவியமாகவும் இன்றும் இருந்து வருகின்றது இந்த “சிவகெங்கைச் சீமை” என்பதை யாராலும் மறுக்கவும் இயலாது. மறக்கவும் இயலாது.