
மிரட்டும் கே.ஜி.எப் சாப்டர் 2 டிரைலர்
இந்நிலையில் கேஜிஎப் 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடந்தது. இதில் யஷ், சஞ்சய் தத், ரவீனா உள்ளிட்ட படக்குழுவினர் உடன் பிருத்விராஜ், கரண் ஜோகர் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பங்கேற்றனர். டிரைலரை கன்னட நடிகர் சிவராஜ் குமார் வெளியிட்டார்.
கேஜிஎப் படத்தின் முதல்பாகம் வில்லன் கருடன் இறந்ததும், அந்த இடத்திற்கு யஷ் செல்வது போன்று முடிந்தது. இரண்டாம் பாகம் கருடன் இறந்த பிறகு என்ன நடந்தது என்பதை விவரிக்கும் விதமாக ஆரம்பமாகிறது. நடிகர் பிரகாஷ் ராஜ் என்ன நடந்தது என்பதை விவரிப்பது போன்று டிரைலர் செல்கிறது.
‛‛ரத்தத்தில் தொடங்கிய கதை இது, மையால் எழுத முடியாது, தொடரனுமுன்னா மீண்டும் ரத்தத்தை தான் கேட்கும்"" என பிரகாஷ் ராஜ் முன்னுரை கொடுக்கிறார். அதன்பிறகு கேஜிஎப்பை கைப்பற்ற அரசு ஒரு பக்கம், சஞ்சய் தத் ஒரு பக்கம் என யஷ் உடன் மோதுவதை டிரைலர் உணர்த்துகிறது. ரசிகர்களிடம் இந்த டிரைலர் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான சற்றுநேரத்திலேயே பல லட்சம் பார்வைகளை டிரைலர் பெற்றுள்ளது.
முதல்பாகத்தை விட இன்னும் மிரட்டலாக அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இந்த படம் இருக்கும் என டிரைலரை பார்க்கும்போதே உணர முடிகிறது. முதல் பாகத்தை போலவே கேஜிஎப் 2வும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!