எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் | திரையுலகில் 50 ஆண்டுகள்: முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா நடத்தும் எழுத்தாளர் சங்கம் | ஆஸ்கர் விருதுக்கு சென்ற படத்திற்கு இந்தியாவில் தடை | சிவாஜியின் அன்னை இல்லம் எனக்கே சொந்தம்: நீதிமன்றத்தில் பிரபு மனு | பிளாஷ்பேக்: பாகவதர் நடிக்காததால் தோல்வி அடைந்த படம் | ஹார்டிஸ்க் ஒப்படைப்பு: தீர்ந்தது சோனா பிரச்னை | ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா |
சென்னை : பத்மவிபூஷண் விருது பெற்ற பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86.
பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா. நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரான பாலமுரளி கிருஷ்ணா, ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியில், சங்கரகுப்தம் என்ற ஊரில், பட்டாபி ராமைய்யா - சூரியகாந்தம் தம்பதியருக்கு 1930ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி பிறந்தவர். அப்பா-அம்மா இருவருமே இசை குடும்பத்தை சேர்ந்தவர்கள். பட்டாபி ஒரு இசை ஆசான். சூரியகாந்தம் ஒரு வீணை கலைஞர். பாரம்பரியமிக்க இசை குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ, சிறுவயது முதல் இசையில் ஆர்வம் கொண்ட பாலமுரளி கிருஷ்ணா, பாருபள்ளி ராமகிருஷ்ணய்யா பந்துலு என்பவரிடம் முறைப்படி இசை பயின்றார்.
9 வயதில் பல வாத்தியங்களில் தேர்ச்சி : தனது 6வது வயதிலிருந்து கச்சேரிகளில் பாட தொடங்கினார். 9 வயதில் வாய்பாட்டு இல்லாமல் வயலின், மிருதங்கம், கஞ்சிரா உள்ளிட்ட வாத்தியங்களில் நன்கு தேர்ச்சி பெற்றார்.
பிரபலங்களுக்கு வயலின் கலைஞர் : வானொலியில் முதன்முதலில் அரங்கேற்றம் நடத்தினார். வானொலியில் ‛பக்தி மஞ்சரி என்ற நிகழ்ச்சியை தயாரித்து தொகுத்து வழங்கி வந்தார். அரியக்குடி, செம்பை, மகாராஜபுரம், ஜி.என்.பாலசுப்ரமணியம் போன்ற முன்னணி பாடகர்களுக்கு வயலின் கலைஞராக பக்கவாத்தியம் வாசித்துள்ளார்.
25 ஆயிரம் இசைக்கச்சேரி : தொடர்ந்து உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை கச்சேரிகள் நடத்தியிருக்கிறார். தென்னிந்தியாவில் அவர் பாடாத சபாக்களே இல்லை. 1967-ம் ஆண்டு ‛பக்த பிரகலாதா என்ற படத்தில் நாரதர் வேடத்திலும், சந்தினே செந்தின சிந்தூரம்(மலையாளம்) படத்திலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
72 மேளகர்த்தா ராகங்களில் கிருத்திகள் : கர்நாடக சங்கீதத்தில் எண்ணற்ற ராகங்கள் இருந்தாலும் அதன் மூல ராகம் என்று சொல்லப்படும் தாய் ராங்கள் 72 தான். இந்த 72 மேளகர்த்தா ராகங்களில் கிருத்திகள் இயற்றி சாதனை படைத்துள்ளார். கர்நாடக இசையில் வாய்ப்பாட்டு, வாத்தியங்கள் வாசிப்பது பல அபூர்வ ராகங்களில் பாடல்கள் இயக்கும் திறன், ஹிந்துஸ்தானி கலைஞர்களுடன் ஜூகல்பந்தி என்ற இசையில் பல்வேறு பரிமாணங்களில் வல்லவர். மேடைகச்சேரி, வானொலி, தொலைக்காட்சி என பல்வேறு ஊடகங்களிலும் பிரதிபலித்தவர்.
புதிய ராகங்களை உருவாக்கியவர் : சுமூகம் (நான்கு சுவரங்கள் கொண்ட ராகங்கள், மகதி (நான்கு சுவரங்கள்), சர்வஸ்ரீ (மூன்றே சுவரங்கள்), ஓம்காரி (மூன்று சுவரங்கள்), பிரதிமத்தியமாவதி, வல்லபி, ரோகினி, லவங்கி, மோகனாங்கி, தொரே, மோகன்காந்தி... இப்படி பல புதிய ராகங்களை உருவாக்கியவர்.
இசை பயின்றவர்கள் : பி.ஜெயச்சந்திரன், கமல்ஹாசன், நடிகை வைஜெயந்தி மாலா, டிஎம் சுந்தரம்(இசை ஆராய்ச்சியாளர்) உள்ளிட்ட பல பிரபலங்கள் இவரிடம் இசை பயின்றவர்கள்.
இசையமைப்பாளர் : சந்தியராகா (கன்னடம்), சங்கரச்சாரியா (சமஸ்கிருதம்), மாத்வாச்சாரியா (கன்னடம்), ராமானுஜசாரிய (தமிழ்), தலைவனுக்கோர் தலைவி 0(தமிழ்) போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட கர்நாடக பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.
கே.வி.மகாதேவன், இளையராஜா, எம்எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ் உள்ளிட்ட பல தமிழ் படங்களின் இசையமைப்பாளர்களின் இசையில் பாலமுரளி கிருஷ்ணா பாடியிருக்கிறார். அதுமட்டுமல்ல தென்னிந்தியாவில் பிரபலமாக திகழ்ந்த பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார்.
விருதுகள் : இந்திய நாட்டின் உயரிய விருதுகளான பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதையும், இரண்டு முறை தேசிய விருது, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே, சங்கீத கலாநிதி (1975), சங்கீத கலாசிகாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
பாலமுரளி கிருஷ்ணாவின் பிரபல தமிழ் பாடல்கள் : தமிழில் ‛திருவிளையாடல் படத்தில் இவர் பாடிய ‛ஒரு நாள் போதுமா...., ‛கவிக்குயில் படத்தில் ‛‛சின்ன கண்ணன் அழைக்கிறான்..., ‛கலைக் கோயில் என்ற படத்தில், ‛‛தங்கம் ரதம் வந்தது வீதியிலே..., ‛சாது மிரண்டால் படத்தில் ‛‛அருள்வாயே நீ அருள்வாயே..., ‛சுபதினம் படத்தில் ‛‛புத்தம் புது மேனி..., ‛கண்மலர் படத்தில் ‛‛ஓதுவார் உன் பெயர் ஓதுவார்..., ‛உயர்ந்தவர்கள் படத்தில் ‛‛ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே..., ‛நூல் வேலி படத்தில் ‛‛மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே...., ‛திசைமாறிய பறவைகள் படத்தில் ‛‛அருட்ஜோதி தெய்வம்..., ‛வடைமாலை படத்தில், ‛‛கேட்டேன் கண்ணனின் கீதோ உபதேசம்..., ‛தெய்வத்திருமணங்கள் படத்தில் ‛‛தங்கம் வைரம் நவமணிகள்..., ‛மகாசக்தி மாரியம்மன் படத்தில், ‛மகரந்தம் தான் ஊதும், சக்கரவர்த்தி மிருதங்கம் படத்தில், ‛‛கேட்க திகட்டாத கானம்...‛, ‛இசைப்பாடும் தென்றல் படத்தில் ‛‛ரகுவர நின்னோ... போன்ற பாடல்கள் கேட்க கேட்க என்றும் திகட்டாதவை.
உடல்தகனம் : பாலமுரளி கிருஷ்ணாவின் உடல் சென்னையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு கமல், இளையராஜா, சிவக்குமார், ராஜேஷ், எஸ்வி.சேகர், சுதா ரகுநாதன், கணேஷ் வைத்தியா, மஹதி, சைலஜா, சங்கர் கணேஷ், கேஜே யேசுதாஸ், எஸ்ஏ.ராஜ்குமார், அருணா சாய்ராம், தீனா உள்ளிட்ட ஏராளமான திரைபிரபலங்களும், வைகோ, ஜிகே வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இவர்கள் தவிர முதல்வர் ஜெயலலிதா, திமுக., தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும், திரைபிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.
பின்னர் நண்பகலில் அவரது உடல் அலங்கரீக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.