நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமான செய்திதான் இது. ஆனால் அதுதான் உண்மை. கே.பாலச்சந்தரின் டாப் 10 படங்களில் ஒன்று அபூர்வ ராகங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகமான படம். இளம் வயது இளைஞன் நடுத்தர வயதை தாண்டிய பெண்ணை காதலிப்பதும், இளம் பெண் நடுத்தர வயதை தாண்டிய ஆணை காதலிப்பதுமான கதை. பெண்கள் இருவரும் அம்மா, மகள், ஆண்கள் இருவரும் அப்பா மகன். இதுதான் ஆபூர்வ ராகங்கள் படத்தின் கதை.
படமும், பாடல்களும் பெரிய வெற்றி பெற்றது. அறிமுகமான ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனார். நடித்த கமல், உலக நாயகன் ஆனார். திரையுலகம் கொண்டாடும் அபூர்வ ராகங்கள் திருட்டு கதை. எழுத்தாளர் என்.ஆர்.தாசன் என்பவர் "கண்ணதாசன் என்ற மாத இதழில் நான் எழுதிய வெறும் மண் என்ற கதையை திருடியே கே.பாலச்சந்தர் படமாக இயக்கி உள்ளார்" என்று கூறி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு நீண்டகாலம் நடந்தது. பின்னர் படத்தை பார்த்து விட்டு என்.ஆர்.தாசனின் கதையையும் படித்த நீதிபதி... "இது என்.ஆர்.தாசனின் கதைதான் என்று தீர்ப்பளித்தார். கதையை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக கே.பாலச்சந்தருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். "என் கதை என்ற தீர்ப்பே போதும் அபராதம் வேண்டாம்" என்று என்.ஆர்.தாசன் கூறினார். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்காமல் அபராதத்தை வாங்கி என்.ஆர்.தாசனிடம் கொடுத்தது.
விக்ரமாதித்தன் கதைகளில் ஒன்று வயதை தாண்டிய காதலை பேசி யாருக்கு யார் என்ன உறவு என்று வேதாளம் விக்ரமாதித்தனிடம் கேள்வி கேட்கும். இந்த கருவை வைத்துதான் என்.ஆர்.தாசனும் கதை எழுதியுள்ளார், கே.பாலச்சந்தரும் படமாக்கி உள்ளார். துரதிர்ஷ்டவசமாக இரண்டும் ஒரே மாதிரி அமைந்துவிட பாலச்சந்தருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது என்பார்கள். வேதாளம் விக்ரமாதித்தனிடம் போடும் புதிரை படத்தில் ஜெயசுதா, மேஜர் சுந்தராஜனிடம் அடிக்கடி சொல்வார். ஆனால் கடைசிவரை விடையை சொல்ல மாட்டார்.