டைரக்டர் விசுவின் பாசறையில் இருந்து வந்தவர் டி.பி.கஜேந்திரன். வீடு மனைவி மக்கள் என்ற படம் மூலம் என்ட்ரியான இவர், எங்க ஊரு காவல் காரன், எங்க ஊரு மாப்பிள்ளை, தாயா தாரமா, பெண்கள் வீட்டின் கண்கள் என வரிசையாக குடும்ப பின்னணி கொண்ட படங்களாக இயக்கி வந்தார். ஒரு கட்டத்தில் நடிகராகவும் களமிறங்கிய அவர், படம் இயக்குவதை தொடர்ந்தார்.
ஆனால், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன் போன்ற படங்களுக்குப்பிறகு அவரது மார்க்கெட் சரிந்தது. இருப்பினும் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில், ஒரு பட நிறுவனத்துடன் கைகோர்த்தபடி விவேக் நடித்த மகனே என் மருமகனே என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை. அதோடு, கடனாளியான கஜேந்திரன், தனது ஒரு வீட்டை விற்றுத்தான் அந்த கடனை அடைத்தார்.
அதனால் சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவருக்கு மீண்டும் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட, கடந்த சில மாதங்களாக அதற்கான முயற்சியில் ஈடபட்டு வந்தார். அவர் சொன்ன கதையை நம்பி ஒரு தயாரிப்பாளரும் படத்தை தயாரிக்க முன்வந்தாராம். ஆனால், இவர் பட வேலைகளை தொடங்கியபோது, திடீரென்று அந்த பட அதிபர் படத்தில் இருந்து கழன்று கொண்டாராம்.
இருபபினும் அந்த படத்தில் சம்பந்தப்பட்ட டெக்னீஷியன்கள், கதை நன்றாக இருக்கிறது படத்தை நீங்களே தயாரித்து இயக்குங்கள் என்று டி.பி.கஜேந்திரனை நச்சரித்து வந்தார்களாம். அதைக்கேட்டு டென்சனான அவர், எல்லோரும சொல்வீர்கள். கடைசியில் படம் ஓடவில்லை என்றால், எஞ்சியிருக்கிற எனது இன்னொரு வீடும் காலியாகி விடுமே. அதையடுத்து நான் வாடகை வீட்டில்தான் குடியேற வேண்டியதிருக்கும். இந்த நிலை எனக்கு தேவையா? தயாரிப்பாளர் கிடைத்தால் மீண்டும் படம் இயக்குவேன் இல்லையேல் முழுநேர நடிகராகி விடுவேன் என்று கூறி விட்டாராம் அவர்.