Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

எம்.ஜி.ஆர்-ன் சிறந்த சாதனை படங்கள்...!

17 ஜன, 2015 - 13:18 IST
எழுத்தின் அளவு:

தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி பாதையை வகுத்துக் கொண்டு, சினிமாவை கண்ணும் கருத்துமாக நேசிக்கவும் செய்து, சாதாரண மக்களுக்கான படத்தையும் கொடுத்து அதன் பின் அரசியலிலும் வெற்றிக் கொடி நாட்டி, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் எம்ஜிஆர்.

சிறிய கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகனாய் உயர்ந்து பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். ஒவ்வொரு படமும் ரசிகர்களை சரியாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக கவனம் செலுத்தி படத்தை மட்டும் ரசிக்காமல் அதில் இடம் பெறும் பாடல்களும் ரசிகர்களைச் சென்றடையும் விதத்தில் படங்களைக் கொடுத்தவர் எம்ஜிஆர்.

அவருக்காக மட்டும் வாழாமல் அடுத்தவர்களுக்காகவும் வாழ்ந்ததால்தான் அவர் இன்றளவும், “மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், ஏழைகளின் பங்காளன்” என அழைக்கப்படுகிறார். அவருடைய பிறந்த நாளில் அவர் நடித்து பலரையும் கவர்ந்த சில திரைப்படங்களைப் பற்றி பார்ப்பது அவருடைய வெற்றி மகுடத்தில் இடம் பிடித்துள்ள சில வைரக் கற்கள்.

உலகம் சுற்றும் வாலிபன்

எம்ஜிஆர் இயக்கம், நடிப்பில் வெளிவந்து தமிழ்த் திரையுலகத்தையே வியக்க வைத்த ஒரு படம். படத்தின் தலைப்புக்கேற்ப உலகம் முழுவதும் சுற்றி வந்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். தமிழக மக்களை தனது 'மாஸ்' நடிப்பின் மூலம் கவர்ந்த எம்ஜிஆர், ஒரு வித்தியாசமான படத்தை அனைவரும் பிரமிக்க வைக்கும் விதத்தில் கொடுத்து ரசிக்க வைத்தார். இரு வேடங்களில் எம்ஜிஆர், அவருக்கு ஜோடியாக மஞ்சுளா, லதா, சந்திரகலா, வில்லன்களாக எம்என் நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்து இன்று வரை ரசிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தை இன்று வரை யாருமே எடுக்கவில்லை என்று கூடச் சொல்லலாம். ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் உட்பட பல ஊர்களில் இப்படம் படமாக்கப்பட்டது.

மின்னல் மூலம் உருவாகும் சக்தியை வைத்து பலன் தரும் ஒரு ஆராய்ச்சியைக் கண்டுபிடிக்கிறார் விஞ்ஞானியான ஒரு எம்ஜிஆர். அதை தனது நாட்டுக்காக அர்ப்பணிக்க நினைக்கிறார். ஆனால், மற்றொரு ஆராய்ச்சியாளர் அதை வெளிநாட்டுக்கு விலை பேசி பணம் சம்பாதிக்க நினைக்கிறார். அதற்கு சம்மதிக்காத எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்டு சுய நினவை இழக்க வைக்கிறார். அந்த விஞ்ஞானியான எம்ஜிஆரின் தம்பியான இன்னொரு எம்ஜிஆர், உளவுத் துறையைச் சேர்ந்தவர். அண்ணனால் உலக நாடுகளில் உள்ள அவருடைய நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆராய்ச்சிக்குறிப்பைக் கண்டு பிடித்து, வில்லன்களிடமிருந்து காப்பாற்ற நினைக்கிறார். அதன் பின் அவர் அதைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பயணிப்பதுதான் 'உலகம் சுற்றும் வாலிபன்'.

பல தடைகளைக் கடந்து வெளியான இப்படம் 200 நாட்களுக்கும் மேல் ஓடி மாபெரும் சாதனை புரிந்தது. அதன் பின் பல முறை வெளியாகி ஒவ்வொரு முறையும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி நல்ல வசூலைத் தேடிக் கொடுத்தது.

ரிக்ஷாக்காரன்

கிருஷ்ணன் இயக்கத்தில், எம்எஸ்.விஸ்வநாதன் இசையமப்பில் எம்ஜிஆர், மஞ்சுளா, பத்மினி, மனோகர், அசோகன், சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், சோ மற்றும் பலர் நடித்த படம்.
இந்தப் படம் மூலம் எம்ஜிஆர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். எம்ஜிஆர் நடிக்கும் படங்களில் ஒரு ஃபார்முலா இருக்கும். ஏழை மக்களைக் கவரும் விதத்தில்தான் அவருடைய கதாபாத்திரத்தை பொதுவாக அமைத்துக் கொள்வார். அதன் மூலம் எளிய மக்களின் மனதில் இடம் பிடித்து விடுவார். இந்தப் படத்தின் ரிக்ஷாக்காரன் கதாபாத்திரம் மூலம் அடித்தட்டு மக்களின் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்து விட்டார். எம்ஜிஆருக்கு சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுத் தந்தது.

மஞ்சுளா இந்தப் படத்தின் மூலம்தான் கதாநாயகியாக அறிமுகமானார். நல்ல படிப்பறிவும், குணமும் கொண்ட எம்ஜிஆர் ரிக்ஷாக்காரனாக இருக்கிறார். அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற குணம் கொண்டவர். பத்மினி, அவர் மீது அன்பு செலுத்தி ஒரு சகோதரியாக அக்கறையுடன் இருக்கிறார். பணக்கார வீட்டுப் பெண்ணான மஞ்சுளா, ரிக்ஷாக்காரனான எம்ஜிஆரைக் காதலிக்கிறார். இந்த சூழ்நிலையில் சமுதாயத்தில் பெரிய நிலையில் இருக்கும் சிலரால் எம்ஜிஆர் பாதிக்கப்படுகிறார். அந்தக் கயவர்களை எதிர்த்து அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் வழக்கம் போல அனைத்துப் பாடல்களும் இனிமையாக அமைந்து படத்திற்கு மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தன. குறிப்பாக, 'அழகிய தமிழ் மகள் இவள்...என்ற பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

மாட்டுக்கார வேலன்

ப.நீலகண்டன் இயக்கத்தில், கே.வி.மகாதேவன் இசையமைப்பில் இரு வேடங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா, லட்சுமி, சோ, அசோகன், வி.கே.ராமசாமி மற்றும் பலர் நடித்த திரைப்படம்.
இந்தப் படத்தில் எம்ஜிஆர் மாட்டுக்கார வேலனாக ஒரு கதாபாத்திரத்திலும், வக்கீல் ரகுவாக மற்றொரு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். எம்ஜிஆர் இதற்கு முன் நடித்து வெளியாக வெற்றி பெற்ற “நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை” ஆகிய படங்களைப் போன்றே இந்தப் படமும் ஆள் மாறாட்டக் கதைதான்.

வி.கே. ராமசாமி வீட்டிற்குள் நுழையும் மாட்டுக்கார வேலன் எம்ஜிஆரைப் பார்த்து வக்கீல் எம்ஜிஆர் என அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் ஜெயலலிதாவும் எம்ஜிஆரை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் வக்கீல் எம்ஜிஆர் அங்கு வர, அங்கு நடக்கும் நிலையைப் பார்த்து அவரும் உண்மையை சொல்லாமல் இருக்கிறார். வக்கீல் எம்ஜிஆர், லட்சுமியைக் காதலிக்கிறார். ஆனால், அவருடைய அப்பாதான் வக்கீல் எம்ஜிஆரின் அப்பாவைக் கொன்றவர். அந்த உண்மை எம்ஜிஆருக்குத் தெரியவர அவர் லட்சுமியை விட்டுப் பிரிகிறார். இந்த வேளையில், மாட்டுக்கார வேலன் பற்றிய உண்மையும் தெரிய வர அவரும் ஜெயலலிதாவை விட்டுப் பிரிகிறார். அதன் பின் பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

கே.வி.மகாதேவன் இசையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. எம்ஜிஆரின் மனம் கவர்ந்த இயக்குனரான ப.நீலகண்டன் இந்தப் படத்தை எம்ஜிஆரின் ரசிகர்களுக்கேற்பக் கொடுத்து படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கி வெள்ளி விழா கொண்டாட வைத்தார்.

அடிமைப் பெண்

கே. சங்கர் இயக்கத்தில், கே.வி.மகாதேவன் இசையமைப்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா, ராஜஸ்ரீ, அசோகன், மனோகர் மற்றும் பலர் நடித்த படம்.

எம்ஜிஆருக்கு அடையாளமாகத் திகழும் அவர் அணியும் தொப்பியை இந்தப் படத்திலிருந்துதான் நிஜ வாழ்க்கையில் அணிய ஆரம்பித்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்றிருந்த போதுதான் எம்ஜிஆர் அந்தத் தொப்பியை வாங்கி அணிந்து பார்த்திருக்கிறார். அவருடைய அழகுக்கு அது மேலும் அழகு சேர்க்கவே எம்ஜிஆரின் அடையாளமாக அந்தத் தொப்பி கடைசிவரை அமைந்து விட்டது.

வில்லனால் கூனனாக, பேசாதவராக, உலக அறிவு இல்லாமல் ஜெயிலில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் எம்ஜிஆருக்கு ஜெயலலிதாவால் விடிவு காலம் பிறக்கிறது. அதன் பின் அவர் எப்படி வீறு கொண்டு எழுந்து தன்னை இன்னலுக்கு ஆளாக்கிய வில்லனை எதிர்த்து பழி வாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.

இந்தப் படத்தில் எம்ஜிஆர் சிங்கத்துடன் மோதும் சண்டைக் காட்சி இன்றுவரை பரபரப்பாக பேசப்படும் ஒன்று. டூப் எதுவும் இல்லாமல் ஒரு அபாயகரமான நிலையில் அந்த சிங்கத்துடன் எம்ஜிஆர் சண்டை போட்டு நடித்ததை இதுவரை வேறு எந்த ஹீரோவுமே செய்ததில்லை.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை இந்தப் படத்தில்தான் எம்ஜிஆர் முதன் முதலாக 'ஆயிரம் நிலவே வோ...' என பாட வைத்தார். எஸ்பிபியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தில் பாடல் பதிவை தள்ளி வைத்து, அதன் பின் பதிவு செய்து, படமாக்கினார். ஜெயலலிதாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

குடியிருந்த கோயில்

எம்ஜிஆரின் இரு வேடப் படங்களில் முக்கியமான ஒரு படம். கே. சங்கர் இயக்கத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா, ராஜஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வில்லனால் சிறு வயதிலேயே பிரிக்கப்பட்டவர்களான இரண்டு எம்ஜிஆர்களில் ஒருவர் வில்லனிடமே வளர்கிறான். இன்னொருவர் மேடைப் பாடகராக இருக்கிறார். வில்லனிடம் வளரும் எம்ஜிஆர் கொள்ளையனாகவும், கெட்டவனாகவும் இருக்கிறார். அவரைப் பிடிப்பதற்காக உருவ ஒற்றுமையில் ஒன்றாக இருக்கும் மேடைப் பாடகர் எம்ஜிஆரை காவல்துறை பயன்படுத்துகிறது. அதன் பின்தான் இரண்டு எம்ஜிஆரும் அண்ணன் தம்பிகள் என்ற உண்மை தெரிய வருகிறது. இரண்டு எம்ஜிஆரும் இணைந்து தங்களது தந்தையைக் கொன்ற வில்லனை எப்படிப் பழி வாங்குகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமான இந்தப் படம் எம்ஜிஆர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கெட்டவனாக நடிக்கும் எம்ஜிஆரின் ஸ்டைல் இந்தப் படத்தில் அற்புதமாக அமைந்தது. படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் அனைத்துப் பாடல்களும் அதிகம் ரசிக்கப்படும் பாடல்களாக அமைந்தன. அதிலும் விஜயலட்சுமியுடன் எம்ஜிஆர் இணைந்து நடனமாடிய “ஆடலுடன் பாடலைக் கேட்டு...” பாடல் அவருடைய நடனத்திற்காக பெரிதும் ரசிக்கப்பட்டது.
ஹிந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற 'சைனா டவுன்' என்ற படத்தின் உரிமையை வாங்கி தமிழுக்கு ஏற்றபடி மாற்றி இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டு வெற்றி பெற்றனர்.

காவல்காரன்

'காவல்காரன்' திரைப்படத்தை எம்ஜிஆர் ரசிகர்களால் மறக்கவே முடியாது. எம்.ஆர்.ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்டு தொண்டையில் குண்டடிபட்டு பாதிக்கப்பட்டதால் இந்தப் படம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு அதன் பின் அவர் குணமாகி வந்த பின் எடுத்து முடிக்கப்பட்ட படம். இந்தப் படத்தில்தான் எம்ஜிஆரின் இருவிதமான குரல்களைப் பார்க்கலாம்.
அதே சமயம், சட்டமன்றத் தேர்தலிலும் மருத்துமனையிலேயே படுத்திருந்து தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏவாகவும் எம்ஜிஆர் தேர்வானதும் நடந்தது.

கடமை தவறாக போலீஸ்காரராக எம்ஜிஆர் நடித்த இந்தப் படத்தை ரசிகர்கள் அவருடைய குரல் வித்தியாசத்தைப் பார்க்காமல் அவரது குரலை மேலும் ரசிக்க ஆரம்பித்தனர். எம்ஜிஆர் , ஜெயலலிதா மீண்டும் இணைந்து நடித்த இந்தப் படமும் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. 1966ம் ஆண்டில் ஆரம்பமான படம் 1968ல் முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது ஒரு சிறப்பான வரலாற்றுப் பதிவு. எம்ஜிஆரின் மனம் கவர்ந்த இயக்குனரான ப.நீலகண்டன் மீண்டும் ஒரு சிறப்பான எம்ஜிஆர் படத்தைக் கொடுத்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இந்தப் படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்த பாடல்கள். வாலியின் வைர வரிகளில் 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது...பாடல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு சிச்சுவேஷன் பாடலாக அமைந்து அற்புதமான அரங்கில் படமாக்கப்பட்டு இன்று வரை இசை ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அன்பே வா

ஏவிஎம் நிறுவனத்திற்காக எம்ஜிஆர் நடித்த ஒரே படம். பல படங்களின் ஏழைப் பங்காளனாக நடித்த எம்ஜிஆர் இந்தப் படத்தில் ஒரு பணக்காரக் கதாபாத்திரத்தில் நடித்தார். மிகவும் ஜனரஞ்சகமான படமாக உருவான இந்தப் படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அமோக வெற்றியைப் பெற்றது.

ஒரு சுவாரசியமான கலகலப்பான காதல் கதை, எம்ஜிஆர், சரோஜதேவி இருவருக்கிடையே காதல் மலர்ந்தாலும் இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். அந்த மோதல் அவர்களை அடிக்கடி பிரித்தும் விடும். அதிலிருந்து அவர்கள் மீண்டு எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதுதான் படத்தின் கதை.

எம்ஜிஆரை வைத்து முதன் முறையாக படம் இயக்கிய ஏ.சி.திருலோகச்சந்தர் இந்தப் படத்தை அனைவரும் ரசிக்கும்படியான படமாகக் கொடுத்திருந்தார். குறிப்பாக இந்தப் படத்தில் அவர் படமாக்கிய 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...' பாடல் மிகவும் பாராட்டப்பட்ட ஒன்று. எம்ஜிஆர், சரோஜாதேவி ஜோடிக்கு இந்தப் படத்தில் இன்னும் அதிகமான வரவேற்பு கிடைத்தது.

ஆயிரத்தில் ஒருவன்

எம்ஜிஆர் நடித்த சரித்திரப் படங்களிலேயே மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம். கடந்த வருடம் கூட டிஜிட்டலில் திரையிடப்பட்டு 100 நாட்களைக் கடந்து ஓடி மகத்தான வசூலை அள்ளியது.

சிவாஜிகணேசன் நாயகனாக நடித்த “வீரபாண்டிய கட்ட பொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன்,” போன்ற அருமையான படங்களைத் தயாரித்து இயக்கிய பி.ஆர்.பந்துலு 'ஆயிரத்தில் ஒருவன்' படம் மூலம் எம்ஜிஆருடன் முதன் முறையாக இணைந்து ஒரு மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்தார்.

கன்னடத்தில் தன்னால் 'சின்ன கொம்பே' என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயலலிதாவை இந்தப் படத்தின் மூலம் எம்ஜிஆரின் நாயகியாக நடிக்க வைத்தார் பந்துலு. அதன் பின் எம்ஜிஆருக்குப் பொருத்தமான ஜோடியாக மாறினார் ஜெயலலிதா. தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஜோடியாக நடித்த 28 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தது.

அற்புதமான அரங்குகள், மிரள வைக்கும் காட்சிகள் என அந்தக் காலத்திலேயே படத்தை மிகவும் அசத்தலாக எடுத்திருந்தார் பந்துலு. மருத்துவத் தொழில் செய்யும் எம்ஜிஆர் அடிமையாக கன்னித் தீவிற்கு விற்கப்பட அந்தத் தீவை கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றி அந்தத் தீவின் இளவரசியான ஜெயலலிதான மனதிலும் இடம் பிடிக்கிறார். ஆனாலும், தன்னுடைய சொந்த நாட்டைக் காப்பாற்ற கடற் கொள்ளையர்களுடன் பயணப்படுகிறார். அதன் பின் அவர்களிடமும் சிக்கிக் கொண்டு அடிமையாகிறார். தன்னுடைய மக்களைக் காப்பாற்ற அவரும் கடற் கொள்ளையனாகிறான். அதன் பின் அவருடைய லட்சித்தை நிறைவேற்றினாரா என்பதுதான் படத்தின் கதை.

நம்பியார், மனோகர், ராம்தாஸ் போன்றோரின் வில்லத்தனமான நடிப்பும், நாகேஷின் நகைச்சுவை நடிப்பும் படத்தில் பெரிதும் பேசப்பட்டது. ஜெயலலிதாவின் அழகான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்து அவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற இந்தப் படம் பெரிதும் உதவியது.

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில் இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றுமே முத்து முத்தாக அமைந்தன. குறிப்பாக “ஏன் என்ற கேள்வி...ஒரு அற்புதமான கொள்கைப் பாடலாக அமைந்தது.

படத்தின் தலைப்புக்கேற்பவே எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவனாக மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் கோடிகளில் ஒருவராகவும் நிரந்தர இடத்தைப் பிடித்தார்.

எங்க வீட்டுப் பிள்ளை

எம்ஜிஆரின் இரு வேட நடிப்பில் வெளிவந்த இந்தப் படமும் அவருடைய முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது. ஒரு எம்ஜிஆர் வீர தீரமானவர், மற்றொரு எம்ஜிஆர் கோழை, அப்பாவியானவர், இப்படி இரு வேடங்களில் எம்ஜிஆர் நடித்து ரசிகர்களை தன் பக்கம் அதிகமாக வசீகரித்தார்.

எம்ஜிஆரின் வர்த்தக ரீதியான படங்களில் இந்தப் படத்தின் வசூலும், வெற்றி விகிதமும் மிகவும் அதிகமான ஒன்று. தெலுங்கில் என்டிஆர் நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற 'ராமுடு பீமுடு' படமே எங்க வீட்டுப் பிள்ளையாக மாறியது.

தாய்மாமனால் அப்பாவியாக வளர்க்கப்படும் ஒரு எம்ஜிஆர் வீட்டை விட்டு ஓடிப் போக, அந்த இடத்திற்கு தைரியசாலியான மற்றொரு எம்ஜிஆர் வருகிறார். இவர் தாய்மாமனின் கொட்டத்தை அடக்க, கடைசியில் இரண்டு எம்ஜிஆரும் அண்ணன் தம்பிகள்தான் என்பது தெரிய வருகிறது. இடையில் எம்ஜிஆர், சரோஜாதேவி , ரத்னா ஆகியோர காதல், இனிமையான பாடல்கள் என இந்தப் படம் அந்தக் காலத்தில் வெளிவந்த போது ரசிகர்களின் அதிகமான வரவேற்பைப் பெற்ற படமாக விளங்கியது.

அதன் பின் எத்தனை முறை வெளிவந்தாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வசூலை அள்ளியது. விஸ்வநாதன் ராமமூரத்தி இசையில் ஒவ்வொரு பாடலுமே என்றும் இனியவையாக அமைந்தன.

படகோட்டி

'படகோட்டி' என்றாலே 'தரை மேல் பிறக்க வைத்தாய்..., கொடுத்ததெல்லாம் கொடுத்தான், தொட்டால் பூ மலரும்..., பாட்டுக்கு பாட்டெடுத்து...' என்று எம்ஜிஆருக்கு முதன் முறையாக பாடல் எழுத ஆரம்பித்த வாலி தொடர்ந்து எம்ஜிஆரின் ஆஸ்தான பாடலாசிரியாக அமைய இந்தப் படம் காரணமாக அமைந்தது. இந்தப் படத்தின் பாடல்களை இன்றும் பலரும் கண்ணதாசன்தான் எழுதினாரோ என்று சந்தேகிக்க வைக்கும் அளவிற்கு இந்தப் படத்தின் மூலம் கண்ணதாசனுக்கு அடுத்து வாலிதான் என்று பேச வைத்தது.

எம்ஜிஆர் அப்போது படங்களில் நடிக்கும் போதெல்லாம் எந்தக் கதையில், எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை அதிக கவனத்துடன் செயல்படுத்தினார். அப்படி அவர் இந்த படத்தில் ஏற்று நடித்த மீனவர் கதாபாத்திரத்தின் மூலம் மீனவ மக்களின் மனதில் ஒருவராக இடம் பிடித்தார். மீனவர்களின் வாழ்க்கையில் இந்த அளவிற்கு வேறு எந்தப் படமும் இதுவரை சொன்னதில்லை.
இரு மீனவக் குப்பங்கள், அவர்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் சில கயவர்கள், இரண்டு குப்பத்தையும் சேர்ந்த எம்ஜிஆர் , சரோஜாதேவி இருவருக்குமிடையே காதல் என ஒரு இனிமையான காதல் கதையாகவும் இந்தப் படம் அமைந்தது.

இன்னும் அவருடைய ஆரம்ப காலத்தில் வெளிவந்த “மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி” ஆகிய படங்களும், அதன் பின் வெளிவந்த “மதுரை வீரன், தாய்க்குப் பின் தாரம், கருப்பு வெள்ளை மற்றும் கலரில் வெளிவந்து சரித்திர சாதனை படைத்த நாடோடி மன்னன், வேட்டைக்காரன், உரிமைக்குரல், இதயக்கனி” போன்ற படங்களும் எம்ஜிஆரின் புகழுக்குரிய படங்கள்.

மேலே சொன்ன படங்கள் மட்டுமல்லாது எம்ஜிஆர் நடித்த மற்ற பல படங்கள் இன்று வரை அவருடைய ரசிகர்களாலும், மற்றவர்களாலும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. இன்றைய விஜய், அஜித் முதல் அனைவரும் பயணிக்கும் கமர்ஷியல் பாதையை அன்று அழுத்தமாகப் பதிய வைத்தவர்.

அவர் வகுத்துத் தந்த பாதையில்தான் இன்றைய திரையுலக நாயகர்கள் பயணித்து வருகிறார்கள். இன்று அரசாங்கம் எச்சரிக்கும் புகை பிடித்தல், மது குடித்தல் போன்ற காட்சிகளை அன்றே மக்களின் நலன் கருதி தன்னுடைய நடிப்பில் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டவர். அவருடைய பிறந்த நாளில் அவருடைய சில படங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வதிலும் தனி ஆனந்தம் உண்டு.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

karutthu - nainital,இந்தியா
24 ஆக, 2020 - 13:39 Report Abuse
karutthu புரட்சி தலைவர் நல்ல விஷயங்களையும் எப்படி வாழவேண்டும் என்று ம் பிறருக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழவேண்டும் என்பதை தன் படத்தின் மூலம் தn ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தன திரைப்படத்தின் மூலம் உணர்த்தினார் தவிர அவர் ஒரு பசிப்பிணி மருத்துவர் .உண்மையில் எம் ஜி ஆர் ஒரு சகாப்தம் தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in